பஸ் சண்டியர்களை மடக்கிப் பிடித்த பொலிஸாருக்கு பாராட்டு

67 0

மதுகம, லிஹினியாவ பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது மற்றொரு பேருந்தில் இருந்து வந்த குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

கொழும்பிலிருந்து நெலுவ நோக்கிச் சென்ற பேருந்து மீது இன்று (18) காலை 7.40 மணியளவில் அவித்தாவவில் இருந்து மத்துகம நோக்கிச் சென்ற பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பேருந்து சாரதி களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெலுவ நோக்கி பயணித்த பேருந்தில் ஹொரவல பிரதேசத்தில் பயணி ஒருவர் ஏற்றப்பட்டது தொடர்பில் குறித்த பேருந்தின் பின்னால் வந்த மத்துகமவிலிருந்து அவித்தாவ நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி திட்டி மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அந்தப் பேருந்தின் சாரதி, அந்த நேரத்தில் அவித்தாவவிலிருந்து மதுகம நோக்கிச் சென்ற மற்றொரு பேருந்திற்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று மதுகம லிஹினியா பகுதியில் நெலுவ-கொழும்பு பேருந்தை வீதியில் மறித்து, அதை நிறுத்தி, பேருந்தை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

பேருந்தில் இருந்த பயணிகளைப் அச்சுறுத்தி சாரதியை தாக்குவதற்காக அவர்கள் பேருந்தின் மூடிய கதவைத் திறக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட மீகஹதென்ன பொலிஸார், மதுகம பகுதியில் தாக்குதலை நடத்திய பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை மிகக் குறுகிய காலத்திற்குள் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட பேருந்தும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சாரதி மற்றும் நடத்துனர் நாளை (19) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தாக்குதலை நடத்திய பேருந்துக்கு எதிராக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் பயணிகள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

மீகஹதென்ன பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்து, சட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்ததற்காக பயணிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.