கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 5 சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாம்

89 0

வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தவிர்ந்த கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 5 சந்தேக நபர்களையும் முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை கைது செய்ய வேண்டாம் என்று குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஹோட்டல் ஒன்றின்  அருகில் இடம்பெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 06 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் பிரதியொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்ததன் பின்னர், சந்தேக நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

மாத்தறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தக் கோரி தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்ததையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுவை பரிசீலித்து நாளை திங்கட்கிழமை (17) தீர்ப்பை வழங்கவுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி  உட்பட 06 சந்தேகநபர்களும் தம்மை கைது செய்ய வேண்டாம் என கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில், சட்டமா அதிபர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் செய்துகொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், ஆரம்ப விசாரணைகள் முடியும் வரை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தவிர்ந்த கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 5 சந்தேகநபர்களையும்  கைது செய்ய வேண்டாம் எனவும், அவர்கள்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியதன் பின்னர் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.