இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கை வருகை

62 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார். சம்பூர் சூரிய சக்தி திட்டம், மஹவ – அனுராதபுரம் புகையிரத பாதை ஆகியவற்றை திறந்து வைப்பார். இந்திய பிரதமரின் அரசமுறை விஜயத்தின் போது புதிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென வெளிவிவகாரம், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும்  சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித  ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை (15)  நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு, செலவுத் திட்டத்தின்   வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்  மற்றும்    சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எமது நட்பு நாடான இந்தியாவுடன்  இணக்கமாகவே செயற்படுகிறோம். எமது அரசாங்கத்துக்கான உத்தியோகபூர்வ அழைப்பை இந்தியாவே முதலாவதாக விடுத்தது. இந்திய விஜயம் பல்துறைகளில் சாதகமாக அமைந்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம்  இலங்கைக்கு உத்தியோகபூர்வ  அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் புதிதாக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும்.

சம்பூர் சூரிய சக்தி வேலைத்திட்டத்தை   இந்திய பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் மஹவ – அனுராதபுரம் புகையிரத பாதையையும் இந்திய பிரதமர் திறந்து வைப்பார்.

மஹவ – அனுராதபுரம் புகையிரத பாதை அபிவிருத்தி திட்டத்தை இந்தியா ஆரம்பத்தில் கடனாகவே வழங்கியது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்த திட்டம் நன்கொடையாக மாற்றியமைக்கப்பட்டது.

அதேவேளை, எமது நாட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு சூரிய சக்தி மின்சாரக் கட்டமைப்பு அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அதனை செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் தோட்டப்புற மக்களுக்கு வீடுகளை வழங்கி வைப்பதற்காக மேலும் உதவிகளை அதிகரித்து அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். அந்த சகல உதவிகளும் எமது நட்புறவின் ஊடாக மேலும் பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்றார்.