பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த காலங்களில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மூடப்பட்ட பல வீதிகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மட்டக்களப்பு விமான நிலையத்திலுள்ள வீதியொன்று தொடர்பில் இங்கே குறிப்பிடப்பட்டது. ஆனால் அது விமான நிலையத்திற்கு நடுவாக செல்வதால் அதனை திறக்க முடியாது. ஆனால் தெற்கு வேலியோர வீதியை திறப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
1985இல் மட்டக்களப்பு விமான நிலையம் பாதுகாப்பு என்ற காரணத்தில் திடீரென விஸ்தரிக்கப்பட்டதன் காரணமாக வலையிறவு, புதுவூர், சேற்றுக்குடா, திமிலைதீவு மற்றும் திருப்பெருந்துறை போன்ற 5 கிராமத்தவர்களின் வீடுகள், வீட்டு காணிகள், வயல்கள், வாணிப நிலையங்கள், பாதைகள் மற்றும் பாடசாலைகள் என்று கணிசமான பகுதிகள் அரசினால் கையகப்படுத்தப்பட்டு, பின்னர் சுவீகரிக்கப்பட்டன.
அவற்றுக்குப்பதிலாக வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிபத்திரங்கள் வழங்கப்படாமை ,குத்தகை கோருகின்றமை, வீதி மூடப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழரசுக்கட்சியின் மட்டகள்ளப்பு மாவட்ட எம்.பி. ஞானமுத்து சிறிநேசனினால் செவ்வாய்கிழமை (11) கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்த உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி ஞானமுத்து சிறிநேசன் உரையாற்றுகையில்,
யுத்த காலத்தில் 1985இல் மட்டக்களப்பு விமான நிலையம் பாதுகாப்பு என்ற காரணத்தில் திடீரென விஸ்தரிக்கப்பட்டது. அதன் காரணமாக வலையிறவு, புதுவூர், சேற்றுக்குடா, திமிலைதீவு மற்றும் திருப்பெருந்துறை போன்ற 5 கிராமத்தவர்களின் வீடுகள், வீட்டு காணிகள், வயல்கள், வாணிப நிலையங்கள், பாதைகள் மற்றும் பாடசாலைகள் என்று கணிசமான பகுதிகள் அரசினால் கையகப்படுத்தப்பட்டு, பின்னர் சுவீகரிக்கப்பட்டன.
இதனால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியாக்கப்பட்டனர். அதன்பின்னர் பதில் காணிகள் என்ற வகையில் 250 குடும்பங்களுக்கு அவை வழங்கப்பட்டன. அவை வழங்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள போதும் இன்னும் அந்தக் காணிகளுக்கான உறுதியான ஆவணங்கள் வழங்கப்படவில்லை.
ஆவணங்கள் தருவதாக கூறப்பட்டுள்ள நிலையில், அந்த காணிகளுக்கு குத்தகையாக பணம் செலுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். அவ்வாறு குத்தகை வழங்கினாலே உறுதிப்பத்திரம் வழங்க முடியும் என்று கூறுகின்றனர்.
வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மக்களிடம் இருந்து நிலங்களை சுவீகரித்துவிட்டு பதிலீடாக வழங்கப்பட்ட காணிகளுக்கு குத்தகை கோருவதும், உறுதிகளை வழங்காமல் இருப்பதும் நியாயமற்ற செயலாகும். இதனால் அவர்களுக்கான உறுதிகளை நிபந்தனையின்றி வழங்குமாறு உரிய அமைச்சரிடம் கோரிக்கை விடுகின்றேன்.
அத்துடன் விமான நிலைய விஸ்தரிப்புக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பாதையை திறந்து வழங்குமாறு மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன். பழைய பாதையை திறக்க முடியாவிட்டால் விமான நிலைய வேலி ஓரத்திலுள்ள பாதையை திறந்து மக்களின் சிரமத்தை போக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவிக்கையில்,
இங்கே பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள புதுவூர் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தேன். இந்த ஆலயத்திற்கு சொந்தமான தேரோட்டம் செய்யும் நிலமும் விமான படையின் கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளேயே இருக்கிறது.
ஆரம்ப காலத்தில் ஏ, பி, சீ என்ற வலயங்களாக அந்தப் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த காலங்களில் சீ வலயத்தில் உள்ள சிறிய பகுதியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
இப்போது யுத்தம் இல்லாத சூழலில் ஏ வலயம் மட்டும் போதுமானது. பி மற்றும் சீ வலயத்தை விடுவித்தால் குறித்த ஆலயத்தின் நிலம் கிடைக்கும் என்பதுடன் மக்கள் அந்த பாதையை பயன்படுத்துவது தொடர்பிலும் ஆராயலாம். இதனால் இந்தக் காணியை விடுவிப்பது முக்கியமானது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலையடிவெட்டை பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பொதுச் சந்தையும் முறக்கொட்டாஞ்சேனை மற்றும் காயங்கேணி ஆகிய பிரதேசங்களிலும் பாடசாலைகள் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன.
தாண்டியடியில் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் துயிலும் இல்லம் உள்ளது. எவ்வாறாயினும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாவட்ட அபிவிருத்திக்குழுவிலும் இது தொடர்பில் அறிவித்துள்ளோம் என்றார்.
வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரன் உரையாற்றுகையில்,
அரசாங்கம் என்ற ரீதியில் அதிகாரத்திற்கு வந்து சில வாரங்களுக்குள் காணி விடுவிப்பு என்ற செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தோம். இதன்படி வடக்கு மாகாணத்தில் பல்வேறு தரப்பு காணிகளை விடுவித்திருந்தோம். அத்துடன் கிழக்கு மாகாணங்களிலும் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதன்படி இந்த விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் தீர்மானங்களுக்கு அமைய சில நடவடிக்கைகளை எடுக்கின்றோம்.
இதில் சில விடயங்கள் மந்தகதியில் இருக்கின்றன. கடந்த பல தசாப்தங்களாக புரையோடிப் போயிருந்த முறைமையொன்றையே நாங்கள் பொறுப்பெடுத்துள்ளோம்.
ஆனால் அரசாங்கம் என்ற வகையில் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இந்த விடயத்தில் பாதுகாப்பு செயலாளருடன் நான் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளேன்.
அவரின் ஆதரவும் இந்த விடயத்தில் இருக்கின்றது. ஜனாதிபதியும் இந்தக் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.
இதேவேளை கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய ஆவணங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். குத்தகைகள் இன்றி மக்களுக்கு அந்த ஆவணங்களை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று கடந்த யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகள் தொடர்பாகவும் நாங்கள் தற்போது அறிக்கையொன்றையும் கோரியுள்ளோம். மாவட்ட மட்டத்தில் இது நடக்கிறது.
இவற்றையும் மிக விரைவில் விடுவித்து மக்களுக்கு தமது சொந்த காணிகளில் குடியேறும் அந்த உரிமையை வழங்குவோம். பொதுக் கட்டிடங்களும் விடுவிக்கப்படும். மக்களுக்கு கூடிய விரைவில் இந்த உரிமைகள் வழங்கப்படும் என்றார்.
இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சத்தியலிங்கம் உரையாற்றுகையில்,
1985ஆம் ஆண்டில் வவுனியாவில் விமான நிலைய விஸ்தரிப்புக்காக மூன்று கட்டங்களாக காணிகள் கையகப்படுத்தப்பட்டன. மூன்றாம் கட்டத்தில் அங்கு 231.67 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன.
அந்தக் காணிகள் வவுனியா நகர விஸ்தரிப்புக்கு முக்கியமானவையாகும். இவற்றை விடுவித்து நகர விஸ்தரிப்புக்காக விடுவிக்குமாறு கோருகின்றேன்.
அத்துடன் வவுனியா ஈச்சங்குளத்தில் பொதுமக்களின் காணி, மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு முகாம் அமைக்கப்பட்டது. கனகராயன் குளத்திலும் 14 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
ஆளும் கட்சி பஉறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் உரையாற்றுகையில்,
புதுவூர், சேற்றுக்குடா, திமிலைதீவு மற்றும் திருப்பெருந்துறை ஆகிய பகுதி காணிகள் 1985இல் மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்புக்காக கையகப்படுத்தப்பட்ட போதும், அந்த காணிகளுக்கான மதிப்பீட்டுக்கமைய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதுடன், ஏனையவர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகள் வழங்கப்பட்டன.
எனினும் அந்த காணிகளை பெற்றுக்கொள்வதில் சிலர் அரசாங்கத்திற்கு குத்தகை கொடுப்பதில் தாமதப்படுத்தியுள்ளனர். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த போது காணி ஆவணங்களை சிலர் தொலைத்துள்ளனர். அது தொடர்பில் தகவல்களை சேகரித்து மாற்று காணி ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
யாழ். மாவட்ட சுயேச்சைக்குழ உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றுகையில்,
பலாலியை அண்டிய வலி. வடக்கு மற்றும் வலி . கிழக்கு போன்ற பகுதிகளில் பெருமளவான காணிகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
எத்தனையோ ஆயிரம் தலைமுறைகளை இழந்தும் எமது மண்ணை சுவாசிக்க முடியாது இருப்பதற்கு இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையே காரணமாகும்.
சிங்களப் பேரினவாதம் எமது தமிழினத்தை சமமாக வாழ விடக்கூடாது என்பதனையே ஏற்படுத்தியுள்ளளது. நில உரிமை, மொழி உரிமை, தாய் மண்ணை நேசிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளன. வடக்கில் இருந்து கிழக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றேன் என்றார்.
இதன்போது பதிலளித்து உரையாற்றிய துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு கூறுகையில்,
1990இல் நாட்டின் பாதுகாப்பு காரணத்திற்காக பலாலி அச்சுவேலி வீதி மூடப்பட்டது. எனினும் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதும் 2024 வரையில் அந்த வீதியை திறக்க முடியாது போயிருந்தது.
ஆனால் நாங்கள் வந்து சிறிய காலத்திலேயே அந்த வீதி திறக்கப்பட்டது. இந்த வீதி மட்டுமன்றி கடந்த காலங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட பல வீதிகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன் வடக்கு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அவ்வாறான வீதிகளை திறக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
அதேவேளை மட்டக்களப்பு விமான நிலையத்திலுள்ள வீதியொன்று தொடர்பில் இங்கே குறிப்பிடப்பட்டது. ஆனால் அது விமான நிலையத்திற்கு நடுவாக செல்வதால் அதனை திறக்க முடியாது.
ஆனால் தெற்கு வேலியோர வீதியை திறப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். விமான நிலைய அதிகாரிகள் மட்டக்களப்பு நகரசபை அதிகாரிகள் அங்கு சென்று அது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
இதன்படி விமானப் படையினரின் இணக்கப்பாட்டுடன், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு விமான நிலையத்தின் காணியில் வேலியின் உள்ளே வீதி அமைக்கப்படும். இதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அத்துடன் காணி விடயத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பதிலை பெற்றுள்ளோம். 40 வருடங்கள் ஆகியுள்ளதால், காணிகளின் சரியான உரிமையாளர்களை அடையாளம் காண முடியாதுள்ளமையினால் இதனால் முறையாக ஆராயாமல் உரித்துகளை வழங்குவதற்கு சட்டப்படி அதிகாரம் கிடையாது.
இதனால் காணி உரித்தானது காணி ஆணையாளரின் விசேட அனுமதியுடன் காணி மதிப்பாய்வு ஊடாகவே நடக்கும். உண்மையான உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் இந்த காணிகள் வழங்கப்படும்.
மக்கள் தமது பிரதேசத்தில் வாழும் உரிமையை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மக்கள் ஆணையை புரிந்துகொண்டு அதுதொடர்பில் செயற்படுவோம் என்றார்.