பெரும்பாகப் பொருளாதார மீட்சியைத் தக்கவைப்பதற்கு கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களில் அவதானம் தேவை

72 0

நாட்டின் தற்போதைய பெரும்பாகப்பொருளாதார மீட்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களில் வலுவாக அவதானம் செலுத்துமாறும், அவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், சிரேஷ்ட பொருளியலாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவியை நாடவேண்டிய அவசியம் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மக்களைத் திருப்திப்படுத்தக்கூடியவாறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கலாசாரத்தை இலங்கை கொண்டிருப்பதன் காரணமாக, அது மீண்டும் பொருளாதார ஸ்திரமின்மை நெருக்கடிக்குள் விழக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய இந்திரஜித் குமாரசுவாமி, நீண்டகாலமாக ஆட்சிபீடமேறிவரும் அரசாங்கங்களின் தேர்தலுக்கு முன்னரான செலவினங்கள் மற்றும் அவை நாணயக்கொள்கைக்கு அப்பால் நிதியியல் நடவடிக்கைகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் குறித்து விளக்கமளித்ததுடன், அவை நாட்டின் பணவீக்க மற்றும் கையிருப்பு நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் விசனம் வெளியிட்டார். அத்தோடு இந்நடவடிக்கைகள் இலங்கையை மொத்தமாக 17 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எது எவ்வாறிருப்பினும் பொருளாதார நெருக்கடியின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட துடிப்பான மறுசீரமைப்புக்கள், தற்போது இலங்கையில் புதியதொரு பெரும்பாகப்பொருளாதார நிர்வாகக்கட்டமைப்பு தோற்றம்பெற வழிவகுத்திருப்பதாக இந்திரஜித் குமாரசுவாமி சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று குறிப்பாக பொதுநிதிச்சட்டம், மத்திய வங்கிச்சட்டம் மற்றும் கடன் முகாமைத்துவ சட்டம் ஆகிய மூன்று பிரதான சட்டங்களின் அனுசரணையுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களைத் தொடரவேண்டியது அவசியம் எனவும், அதனூடாகவே எதிர்காலத்தில் தோற்றம்பெறும் சாத்தியப்பாடுடைய பொருளாதார ஸ்திரமின்மை நிலையைத் தவிர்த்துக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

‘நாம் கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டங்களின்கீழ் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்குக் கொண்டுவந்திருப்பினும், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தவறியமையினால் அதில் பின்னடைவுகளுக்கு முகங்கொடுத்திருந்தோம்.

குறிப்பாக நாட்டில் தேர்தல் காலம் நெருங்கும்போது அரசாங்கம் பல முக்கிய கொள்கைகளிலிருந்து பின்வாங்குவதையும், அனைத்தும் தலைகீழாக மாறுவதையும் அவதானித்திருக்கிறோம். இவ்வாறானதொரு பின்னணியில் புதிய பெரும்பாகப்பொருளாதாரக் கொள்கையின் ஊடாக எட்டப்பட்ட புதிய அடைவுகளைப் பாதுகாத்துக்கொள்வதே தற்போதைய தேவைப்பாடாக இருக்கிறது’ என்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.