விமானப் பயணிகள் , பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : சந்தேக நபர் பிணையில் விடுதலை

81 0

இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை பெற்ற 65 வயதுடைய நபரொருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் அதிகாலை 12.45 மணியளவில் இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துள்ள நிலையில் மது போதையில் பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.