வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் சட்டம் குறித்து அவதானத்துடன் செயற்படுங்கள்

83 0

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

19ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலம் நிறைவடையவுள்ளது. தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் சட்டத்தின் 28ஆவது உறுப்புரைக்கமைய அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வேட்புமனுக்களை இரத்து செய்வது எமது நோக்கமல்ல. தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பளிக்கப்பட வேண்டுமெனில் வேட்மனுக்கள் அதற்கேற்றவாறு தவறுகள் இன்றி சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோன்று 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம், 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். தேர்தலின் போது வாக்காளர்களைப் போன்று வேட்பாளர்களுக்கும் ஜனநாயக பொறுப்பு காணப்படுகின்றது என்பதால் அதற்கேற்ப செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என்றார்.