உதகை கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சி பாதுகாப்பு ஏற்பாடுகள்: கோவை சரக டிஐஜி ஆய்வு

9 0

சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித குற்ற சம்பவங்கள் நடக்காமல், அவர்கள் பாதுகாப்பாக திரும்பி செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை சரக டிஐஜி சசிமோகன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சிக்கான பாதுகாப்பு ஏற்படுகள் குறித்து கோவை சரக டிஐஜி சசிமோகன் ஆய்வு செய்தார். மேலும், கோடை சீசன் காலத்தில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் ஓய்வு எடுக்க நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வு விடுதியை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும், சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித குற்ற சம்பவங்களும் இன்றி பாதுகாப்பான முறையில் திரும்பி செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கோடை சீசனுக்காக உதகை நகரில் தற்போதுள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக அதிகரிக்கபட உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களில் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கப்படும்.

உதகையில் உள்ள பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி இருந்தால், அதில் ஒரு சிசிடிவி கேமராவை மக்கள் நடமாடக்கூடிய பகுதிகளை நோக்கி வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் போது குற்ற சம்பவங்களை எளிதில் தடுக்க முடியும். கடந்த ஆண்டுகளை போல கோடை காலத்தில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார். ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, கூடுதல் எஸ்பி மணிகண்டன் உடனிருந்தனர்.