டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாம் நகரும்போது, தேசிய டிஜிட்டல் உட்கட்டமைப்பிற்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தற்போதைய வரி கொள்கையில் டிஜிட்டல் துறைக்கு வரி விலக்களிக்கப்பட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
டிஜிட்டல் துறைக்கு உண்மையில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியமும் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
ஆனால் இந்த துறையில் ஆராய்ச்சி, மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மூலதனத்தை அனைத்து வரிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.
நிதி அமைச்சராக பதவி வகித்த போது இத்துறைக்கு ஓரளவு பலம் அளிக்கும் வகையில் ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டன. தற்போது பொருளாதார சுதந்திரத்தை அடைந்துள்ளோம்.
இந்த வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உலகுக்கு ஏற்றாட் போல் புதிய திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். அக்காலப்பகுதியில் திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினோம். ஆனால் இது குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன.
இப்போது எப்படியோ டிஜிட்டல் மயமாக்கல் முன்னேற்றமடைந்துள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கங்கள் என்ற வகையில், நாம் இந்த வகையான விஷயங்களை முன்னோக்கி எடுத்து, எதிர்கால சந்ததியினருக்கு இந்த நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாம் நகரும்போது, தேசிய டிஜிட்டல் உட்கட்டமைப்பிற்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
டிஜிட்டல் முறைமை தொடர்பில் மக்கள் மத்தியில் சிறந்ததொரு நிலைப்பாடு தோற்றம் பெற வேண்டும். அதற்கான திட்டங்களை அரசாங்கம் கொள்கை ரீதியில் செயற்படுத்த வேண்டும். புதிய கொள்கை திட்டங்கள் ஊடாகவே நவீன சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.

