ஊழல் மோசடிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே கடந்த அரசாங்கங்கள் அரச நிர்வாக கட்டமைப்பில் டிஜிட்டல் முறைமையை செயற்படுத்தவில்லை. ஊழல் மோசடியை இல்லாதொழிக்க வேண்டுமாயின் அனைத்து நிர்வாக செயற்பாடுகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நவீன பொருளாதார கொள்கைக்கு ஈடு செய்யும் வகையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கள் அபிவிருத்தியடைய வேண்டும்.
கடந்த காலங்களில் இந்த அமைச்சுக்கள் கவனத்திற் கொள்ளப்படவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெற்று நிலைபேறான நிலைக்கு செல்வதாயின் டிஜிட்டல் பொருளாதாரம் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு 20.9 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சுக்களின் கீழ் 12 நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கும் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆசிய வலயத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அரச மற்றும் தனியார் நிர்வாக கட்டமைப்பில் ஊழல் மோசடியை தடுப்பதற்கு அனைத்து கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளிலும் டிஜிட்டல் (எண்ணியல்) முறைமையை அமுல்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கையில் டிஜிட்டல் முறைமை அரச நிறுவனங்களில் கூட அமுல்படுத்தப்படவில்லை.
ஊழல் மோசடிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே கடந்த அரசாங்கங்கள் அரச நிர்வாக கட்டமைப்பில் டிஜிட்டல் முறைமையை செயற்படுத்தவில்லை.
ஊழல் மோசடியை இல்லாதொழிக்க வேண்டுமாயின் அனைத்து நிர்வாக செயற்பாடுகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவேண்டும அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம் என்றார்.

