விமான நிலையத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் மூவர் கைது

104 0
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்த சுங்க அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கம்பளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சிகரெட்டுகளை கொண்டு வந்த சுங்க அதிகாரி மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரும் நேற்றையதினம்  காலை 08.45 மணிக்கு துபாயிலிருந்து ஃப்ளை துபாய்  FZ-569 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சுங்க அதிகாரி தனது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை காண்பித்து விமான நிலையத்திற்குள் நுழைந்து, விமான நிலையத்திலிருந்து சிகரெட்டுகளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சுமார் 09 இலட்சம் ரூபா மதிப்புடைய  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 60,000  ”மான்செஸ்டர்”  வகை சிகரெட்டுகள் அடங்கிய 300 சிகரெட் கார்டூன்கள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 பயணப்பைகள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேநபர்களும்  கொண்டு வந்த சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தல், கடத்தல் மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று புதன்கிழமை (12)  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.