கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை வம்சாவழிப் பெண் உயிரிழப்பு !

77 0
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரகுதாஸ் நிலக்சி என்ற தமிழ் பெண் ஒருவர் கனடாவின் மார்க்கம் நகரத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கனடாவின் மார்க்கம் நகரத்தில் உள்ள வீடொன்றிற்குள் கடந்த 07 ஆம் திகதி அத்துமீறி நுழைந்த துப்பாக்கிதாரிகள் சிலர் ரகுதாஸ் நிலக்சி என்ற பெண்ணையும் ஆணொருவரையும் வீட்டிலிருந்த வளர்ப்பு நாயையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும் உயிரிழந்த நாயையும் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 20 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த வீட்டின் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு தடவையும் மார்ச் மாதம் இரு தடவைகளும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ள நிலையில் பொலிஸார் தற்போது அந்த காணொளியை வெளியிட்டுள்ளனர்.

எனவே, இந்த காணொளியில் உள்ள நபர்கள் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என தெரிவிக்கும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண்ணான ரகுதாஸ் நிலக்சி, அவர் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வசித்தவர் என்றும் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா சென்றுள்ளார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.