டிரான் அலஸிற்கு எதிராக ஜனாதிபதி செயற்படமாட்டார்!

78 0

தலைமறைவாகியுள்ள தேசபந்துவின் பின்னணியில் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , டிரான் அலஸிற்கு எதிராக செயற்படமாட்டார். இதனால் தான் தேசபந்து தென்னகோன் பாதுகாக்கப்படுகிறார். வி.எப்.எஸ். விசா கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் டிரான் அலஸிற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. இவர்கள் அனைவரும் நண்பர்கள், இவர்களின் டீல் அரசியலை நாங்கள் நன்கு அறிவோம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஹோமாகம பகுதியில் நேற்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தேர்தல் கண்காணிப்பு காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நட்டமடைந்த அரச நிறுவனங்களை இலாபமடைய செய்த அனுபவம் எமக்குள்ளது. நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட கூடியவர்கள் எம்மிடம் உள்ளார்கள்.ஹோமாகம பிரதேச சபையின் வருமானத்தை 100 கோடி முதல் 200 கோடி வரையில் எம்மால் அதிகரிக்க முடியும்.ஆகவே பழைய அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பது இனி பயனற்றது.ஐக்கிய குடியரசு முன்னணி பென்சில் சின்னத்தில் புதியவர்களை களமிறக்கும்.

மின்கட்டணத்தை மூன்றில் ஒன்றாக குறைப்பதாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும், ஊழல்வாதிகளை பிடிப்பதாகவும், ஊழல் செய்த அரச நிதியை மீண்டும் அரசுடமையாக்குவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.ஆகவே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

இலங்கை மின்சார சபை நட்டமடைகிறது ஆகவே மூன்றில் ஒரு பங்காக மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். மின்சார சபை கடந்த ஆண்டு 144 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பல விடயங்களை எதிர்வரும் நாட்களில் வெளியிடுவோம்.

ஆரசாங்கம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல பொய்களை வாக்குறுதிகளாக வழங்கியது. ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதாகவும், சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியில் இருக்கும்வரையில் அர்ஜுன மகேந்திரனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை. எங்கோ தலைமறைவாகியுள்ளார். தேசபந்துவின் பின்னணியில் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , டிரான் அலஸிற்கு எதிராக செயற்படமாட்டார்.இதனால் தான் தேசபந்து தென்னகோன் பாதுகாக்கப்படுகிறார். அத்துடன் வி.எப்.எஸ் விசா கொடுக்கல் வாங்கல்; மோசடி தொடர்பில் டிரான் அலஸிற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.இவர்கள் அனைவரும் நண்பர்கள்,இவர்களின் டீல் அரசியலை நாங்கள் நன்கு அறிவோம் என்றார்.