பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்: சுமந்திரன் எம்.பி

232 0

தமக்கு நிரந்தர அரச தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த முதலாம் திகதி தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன் போது ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவுகளைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டதாரிகளுக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரது வழிகாட்டுதலின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது ஆலோசகருடன் நேற்று கலந்துரையாடியிருந்தார்.

அதற்கமைய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் இதன் போது மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில் குறித்த தீர்மானங்களின் மூலம்,

கால மூப்பு அடிப்படையில் ஆரம்பத்தில் 1000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்காக ஆளணி அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 2012ம் ஆண்டு பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து அந்த ஆயிரம் பேருக்குள் பட்டதாரிகள் உள்வாங்கப்பட உள்ளனர்.

குறித்த ஒரு தொகையினருக்கு தகவல் தொழில் நுட்பத்திற்கான பயிற்சியை வழங்கும் முகமாக அவர்களை ஆரம்பத்தில் பயிற்சியாளர்களாக நியமிப்பதோடு, பின்னர் தகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கும் நியமனம் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கிழக்கு மாகாண விவசாயத் துறை அமைச்சருக்கு அறிவித்தார்.

தொடர்ந்து கிழக்கு மாகாண விவசாயத் துறை அமைச்சர் துரைராஜசிங்கம் இன்று(04) காலை பட்டதாரிகளைச் சந்தித்து இவ்விடயத்தினை பட்டதாரிகளுக்குத் தெரிவித்தார்.

இதன் போது நியமனத்திற்குள் உள்வாங்கப்படும் பட்டதாரிகள் தவிர்த்து ஏனைய அனைவருக்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுமா? என்கின்ற கேள்வி பட்டதாரிகளினால் அமைச்சரிடம் விடுக்கப்பட்டது.

இதன் போது அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவிக்கையில், தற்போது கொழும்பில் மத்திய விவசாய அமைச்சில் மாகாண அமைச்சர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதற்கு தாம் செல்லவிருப்பதாகவும், அங்கு சென்று எதிர்க்கட்சதித் தலைவர் சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடி இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் துரைராஜசிங்கம் பட்டதாரிகளுக்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.