எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன இம்முறை இரத்தினபுரி மாவட்டத்தில் ஏணி சின்னத்தில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அரசியல் குழு கூட்டம் சனிக்கிழமை (08) இரத்தினபுரியில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன இம்முறை இரத்தினபுரி மாவட்டத்தில் ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய இம்முறை கட்சியின் ஆதரவாளர்கள் ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளனர். அந்த வகையில், இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் தனித்து போட்டியிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மடுல்ல, கஹவத்த, பலாங்கொடை, இம்புல்பே மற்றும் நிவித்திகல ஆகிய ஏழு பிதேசசபைகளின் கீழ் போட்டியிட உள்ளோம். ஏனைய பிரதேசசபைகளில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. கட்சியின் தீர்மானத்துக்கமைய ஏனைய பிரதேச சபைகளில் தனித்து போட்டியிடுவதா அல்லது கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் முடிவு செய்யப்படும்.
எவ்வாறெனினும், தற்போது மேற்குறிப்பிட்ட 7 பிரதேச சபைகளின் கீழ் தனித்து போட்டியிட உள்ளோம். இரத்தினபுரி மாவட்டத்தின் அனைத்து பிரதேச சபைகளிலும் கற்ற இளைஞர்களை களமிறக்கி தேர்தலில் வெற்றி பெற எதிர்பார்த்துள்ளோம். கடந்த தேர்தலில் எமது கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஏழு உறுப்பினர்கள் பிரதேச சபைகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இம்முறை அதைவிட இருமடங்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.

