கருஜய சூரியவைப் போன்று சிரேஷ்ட பிரஜையொருவரை கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராகக் களமிறக்குவோம். கொழும்பு உட்பட குறிப்பிடத்தக்க உள்ளுராட்சிடமன்றங்களில் நாமே அதிகாரத்தை கைப்பற்றுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்களவு தொகுதிகளில் நாம் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். அதற்குரிய வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுத்துள்ளோம். கடந்த தேர்தல்களை விட இம்முறை நாமே முன்னிலையிலுள்ளோம்.
தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரதேசசபை, நகரசபைத் தலைவர்கள், மாநகர மேயர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். குறிப்பாக கொழும்பில் அந்த அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சூட்சுமமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.
சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராகக் களமிறக்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். மேயர் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். முன்னாள் சபாநாயகர் கருஜய சூரியவைப் போன்று சிரேஷ்ட பிரஜையொருவரை களமிறக்குவோம் என்றார்.

