அரசியலமைப்பில் திருத்தம் செய்து, அடிப்படை உரிமைகளில் சிறுவர் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை உள்ளடக்க வேண்டும் என யோசனை முன்வைப்பதோடு சிறுவர் மற்றும் பெண்களுக்காக இரண்டு விசேட ஜனாதிபதி செயலணிகளை தாபிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08)இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
சமூகத்தில் குழந்தைகள், தாய்மார்கள், பெண்களைப் பார்க்கும்போது, உணவுப் பணவீக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மிக ஆபத்தான, தீங்கு விளைவிக்கும், பாதகமான பொருளாதார மற்றும் சமூக சுழற்சியில் இவர்கள் நித்திய கைதிகளாக மாறியிருப்பதைக் காண்கிறோம். பணவீக்க அதிகரிப்பால், அரிசி, தேங்காய், உப்பு போன்ற மனித வாழ்க்கையை பேணிச் செல்லத் தேவையான வசதிகளை தாயும் குழந்தையும் இழந்துள்ளனர். வரவு செலவுத் திட்டமானது உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான வசதிகளை ஸ்திரப்படுத்தாத போது, அது நாட்டையே பாதிக்கும் ஒரு தீய சுழற்சிக்கு வழிவகுக்கிறது.
நமது நாட்டில் 10 பேரில் 6 பேர் பல ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள். தாய், குழந்தைகள் மற்றும் பெண்களே சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் மிகவும் பன்முக அழுத்தங்களுக்கு அவ்வப்போது முகம்கொடுக்கின்றனர்.
அனர்த்தங்கள், தொற்றுநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே வீடு, வேலை, வீதிகள் போன்றவற்றில் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் தேசிய ரீதியிலான சர்வகட்சி சார் அரசியலற்ற சுயாதீன வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்.
75 வீத ஆண்கள் பெண் ஊழியர்களுக்கு எதிராக ஒரு சார்பு நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு பெண்களை பணியமர்த்துவதை தடுக்கிறார்கள்.
மேலும் தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்கள் வீட்டுப் பணியாளர்களை உள்ளடக்காது காணப்படுகின்றன. எனவே, வீட்டு வேலைகளில் ஈடுபடும் பணிப் பெண்கள் குறைந்தபட்ச சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது
பட்டதாரி ஆட்சேர்ப்பில் 64.7 வீத பெண்கள் உள்வாங்கப்படுகின்றனர். தொழிலாளர்களில் 32 வீத பெண்களே காணப்படுகின்றனர். 54வீத பெண்களே சுயமாக மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது எவ்வாறு என அறிந்து வைத்துள்ளனர். டிஜிட்டல் கல்விக்கான அணுகல் சிறுவர்களுக்கு அதிகம். நீதித்துறையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒரு பெண் கூட இல்லை.
உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட உயர் நீதிமன்றத்தின் 17 உறுப்பினர்களில் 3 பேர் பெண்கள். 2019 இல் 37வீத நிர்வாக பதவிகளில் 16வீத பெண்கள் நிறைவேற்று தரத்தில் இருந்தனர். இவ்வருடம் பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது அதனை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
இலங்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 4வீதம் பதிவாகியுள்ளது. இந்நாட்டில் உள்ள பெண்கள் நெருங்கிய துணையால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவது இரண்டு மடங்கால் அதிகரித்து காணப்படுகிறது. பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர்களில் 87வீதமானோர் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஆவர்.
பல்வேறு சர்வதேச சமவாயங்கள் மற்றும் புரிந்துணர்வுகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருந்தாலும், மாநாடுகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்பட்டாலும், இவை எந்தளவுக்கு நடைமுறையில் காணப்படுகின்றன என்பதைக் கேட்க வேண்டியுள்ளது. இவை நாட்டின் சட்டமாக மாற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டும். எனவே அரசியலமைப்பில் திருத்தம் செய்து, அடிப்படை உரிமைகளில் சிறுவர் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை உள்ளடக்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்
அத்துடன், சிறுவர் மற்றும் பெண்களுக்காக இரண்டு விசேட ஜனாதிபதி செயலணிகளை தாபிக்க வேண்டும். கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதைப் போன்று இதற்கும் உருவாக்க வேண்டும். சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் பொதுவான பொறிமுறையொன்று அமைந்து காணப்பட வேண்டும். இதற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அளவு மற்றும் தரம் குறித்து தொடர் கண்காணிப்பு காணப்பட வேண்டும்.
இன்று சமூகத்தில் நுண்நிதி மரண பொறியில் அதிகளவிலான பெண்கள் சிக்கியுள்ளனர். இதிலிருந்து பெண்களை மீட்க வேண்டும். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்காக விசேட திட்டத்தை முன்வைக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு மில்லியன் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் வேலைத்திட்டத்தை நான் முன்வைத்தேன். பெண்களை மையப்படுத்தியும் இவ்வாறான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும்
இலங்கையில் 17910 பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றன. இதில் சுமார் 279000 பேர் கல்வி கற்று வருகின்றனர். இந்த முறைசாரா அமைப்பை வலுப்படுத்தவும், முறைப்படுத்தவும் அரசாங்கம் தலையிட வேண்டும்.
76 ஆண்டுகால வரலாற்றில் நாடு வீழ்ச்சியடைந்ததாக கருத்து தெரிவிக்கின்றனர். 1945 இல் ஆண்களின் ஆயுட்காலம் 46 ஆண்டுகளாக காணப்பட்டாலும், 2021 க்குள் இது 72 ஆண்டுகளாக அதிகரித்து காணப்பட்டுள்ளன. 1945 இல் பெண்களின் ஆயுட்காலம் 44 ஆண்டுகளாக காணப்பட்டன, ஆனால் 2021 இல் இது 80 ஆக அதிகரித்து காணப்படுள்ளன. நாட்டில் காணப்பட்ட சமூக நல அரசுகள் காரணமாகவே இந்த ஆயுட்காலம் அதிகரித்தன. குழந்தை இறப்பு விகிதம் கூட குறைந்து காணப்படுகின்றன என்றார்.

