பாடசாலை மாணவர்களுக்காக சேவையில் 2 ஆயிரம் பேருந்துகள்!

76 0

பாடசாலை மாணவர்களின்  பொது போக்குவரத்து வசதிகளை கருத்திற்கொண்டு ‘சிசுசரிய’ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 2000 பேருந்துகள்  சேவையில் ஈடுபடுத்தப்படும்.   பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள்  தொடர்பான விபரங்களை  கல்வி அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டுமென சபை முதல்வரும், போக்குவரத்து அமைச்சருமான  பிமல் ரத்நாயக்க  குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07)  நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்    போக்குவரத்து  நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்  சிவில்  விமான சேவைகள் மற்றும்  நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி  ஆகிய  அமைச்சுக்கள்  மீதான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பிரதமர்  பாடசாலை மாணவர்களின்  போக்குவரத்து   வசதிகள்  குறித்து சில விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொது போக்குவரத்து சேவை தொடர்பில் பிரதமர் தனது உரையில் பல விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். கல்வி அமைச்சர்  என்ற அடிப்படையில்  பாடசாலை மாணவர்களின் பொது போக்குவரத்து சேவை தொடர்பிலும் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கை போக்குவரத்து சபையானது சிசுசரிய திட்டத்தின் கீழ்  1500 பேருந்துகளை   சேவையில் ஈடுபடுத்துகிறது. இந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு 2000  ஆக அதிகரித்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய  பிரதேங்களில் உள்ள மாணவர்கள்  போக்குவரத்து சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பான விபரங்களை கல்வி  அமைச்சர் என்ற அடிப்படையில் எமக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே   பேரூந்து உரிமம் அனுமதி பத்திரம் மாற்றம் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.  பேருந்து அனுமதி பத்திர சட்டத்தை திருத்தம் செய்யும்  வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரமளவில்  சட்ட மூலம்  வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். சட்டம் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர்  அனுமதி பத்திர உரிமத்தை பரிமாறிக் கொள்ளலாம் என்றார்.