மலையக மக்களுக்கான காணி உரித்தை வழங்குவதற்கு ஒத்துழைப்போம் – ஜீவன் தொண்டமான்

82 0

வீட்டை வைத்து மலையகத்தில் அரசியல் செய்ய முடியாது. அவர்களுக்கு காணி உரிமையே வழங்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் போக்குவரத்தில் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார். இந்நிலையில் ஹட்டனில் சம்பவமொன்று நடந்துள்ளது. அதாவது நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை பிள்ளைகள் இ.போ.ச பஸ் ஒன்றில் ஏறிய போது பஸ் நடத்துனர் தவறான சொற்களை பயன்படுத்தி அவர்களை பலவந்தமாக கீழே இறக்கியுள்ளார்.

இது என்னுடைய பஸ், இதில் யாரை உள்ளே வைத்திருப்பது இறக்குவது என்பதனை நானே தீர்மானிப்பேன் என்று நடத்துநர் கூறியுள்ளார்.  50 வருடங்களுக்கு முன்னர் இனவாதம் தலைத்தூக்கியிருந்த போது இதேபோன்றே எந்த தவறும் செய்யாத மலையக மக்களை நடத்தினர். இதனை மீண்டும் செய்வது பிரச்சினைக்குரியதாகும். அதனால் குறித்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் நடத்துநரை சேவையில் இருந்து இடைநிறுத்துவதுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. அது நிரந்தரமானதாக இருக்க வேண்டும். இடைநிறுத்திவிட்டு 6 மாதங்களில் மீண்டும் உள்ளே கொண்டுவருவர். அதனால் இதனை கருத்திற்கொள்ள வேண்டும்.

மேலும் நீர்வழங்கல் அமைச்சில் இருந்த போது நாங்கள் 6000 மில்லியன் லாபத்தை காட்டியுள்ளோம். அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கையொன்றை விடுத்து மலையக மக்களுக்காக அபிவிருத்தி நிதியை ஒதுக்குமாறு கோரியிருந்தோம். அதன்படி வீதி அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த நிதி மூலம் பொகவந்தலாவ, நோர்வூட், கொட்டகலை, நாகசேனை ஆகிய இடங்களில் வீதி அபிவிருத்திகளை செய்துள்ளோம். எவ்வாறாயினும் 294 கிலோ மீற்றர் வீதிகள் சீரமைக்கப்படாது உள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

அத்தோடு வீட்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அமைச்சு ரீதியில் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்காக 387 வீடுகளுக்கான திட்டமே உள்ளன. மலையகத்தில் 2 இலட்சத்து 51ஆயிரம் குடும்பங்கள் வீடுகள் இன்றி இருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தால் ஏற்கனவே நான்காயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 10ஆயிரம் வீடுகள் வரவுள்ளன. எவ்வளவு வாய்சொல் வீரர்களாக இருந்தாலும் வீட்டுப் பிரச்சினை தீரப்போவதில்லை.

மலையக மக்களுக்காக இரண்டு இலட்சத்து நான்காயிரம் ஹெக்டேயரில் 10 பேர்ச்சர்ஸ் என்ற அடிப்படையில் குடும்பமொன்றுக்கு காணியை வழங்கினால்  4777 ஹெக்டேயர் மட்டுமே போகும். காணி உரிமையே மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகும். சலுகை அரசியல் மலையக மக்களை மாற்றப் போவதில்லை. மாற்றம் தேவையென்றால் கட்டாயம் காணி உரிமையை வழங்கியே ஆக வேண்டும்.

காணியை அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்களால் சொந்த வீட்டை கட்ட முடியும். நாடளாவிய ரீதியில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. ஏன் மலையக மக்களுக்கு அதனை வழங்க முடியாது. வீட்டை வைத்து அரசியல் செய்ய முடியாது. அவர்களுக்கு காணி உரிமையையே வழங்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம். நாங்கள் மூன்று முறை அதுதொடர்பில் அமைச்சரவையில் அனுமதி பெற்றுள்ளோம் அதனை செயற்படுத்தவே வேண்டியுள்ளது என்றார்.