இ​.போ.ச நடத்துனரின் அடாவடி

72 0

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏறிய பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு கடுந்தொனியில் பேசி நடந்து கொண்ட அந்த பஸ்ஸின் நடத்துனருக்கு எதிராக அதிரடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், ஹட்டன் டிப்போ முகாமையாளரை வலியுறுத்தியுள்ளார்.

ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலப்பிட்டியில் இருந்து கினிகத்தனை ஊடாக  ஹட்டனுக்கு  பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பாடசாலை மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு பேருந்து நடத்துனர் கோரிவந்த சம்பவம்   இடம் பெற்றது

குறித்த இந்த மாணவர்கள் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களையே இந்த பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்

பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை பேருந்து நடத்துனரிடம் காண்பித்த போதும் பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியதாக   மாணவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

நாவலபிட்டியில்  இருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டன்  வரை செல்லும் அரசு பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அரச பேருந்து நடத்துனரின் சொந்த பேருந்து அல்ல பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம்  பேருந்தை விட்டு வெளியேற முடியாது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த பேருந்து நடத்துனர் ஆம் இது என்னுடைய பேருந்து நீங்கள் எல்லாம் பேருந்தை விட்டு இறங்குமாறு வலியுறுத்தியதாக வெளியிடப்பட்ட காணொளி ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக காணொளியை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.