மும்மொழி கொள்கையை எதிர்க்கும் ஸ்டாலின் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடை விதிப்பாரா?

84 0

மும்மொழி கொள்கையை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடை விதிப்பாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக ஆரம்பித்துள்ளது. அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இணையதளத்தில் மட்டும் 24 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் டிஜிட்டல் கையெழுத்தை பதிவு செய்துள்ளனர். தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொதுமக்கள் நம்பிக்கையுடன் கையெழுத்திட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பாஜக தொண்டர்கள், தலைவர்கள் பொதுமக்களிடம் கையெழுத்தை சேகரித்து வருகின்றனர்.

சென்னை எம்ஜிஆர் நகரில் பொதுமக்களின் கையெழுத்தை சேகரிக்க சென்ற தமிழிசை சவுந்தரராஜனிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டவிதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீதிக்கு வந்து மக்களை சந்திப்பது அரசியல் கட்சியின் அடிப்படை கடமை, உரிமை. மத்திய அரசுக்கு எதிராக போராடலாம், கிளர்ச்சி செய்யலாம் என முதல்வர் கூறுகிறார். ஆனால், நாங்கள் யாரும் மாநில அரசுக்கு எதிராக போராடவில்லை. கிளர்ச்சி செய்யவில்லை. மக்களை ஒருங்கிணைத்து கையெழுத்து இயக்கத்தை நடத்தி கொண்டிருக்கிறோம்.

தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்தது, திமுக அரசின் கோழைத்தனத்தை, பயத்தை காட்டுகிறது. நாங்கள் சொன்னதுபோல 1 கோடி கையெழுத்தை வாங்கி, குடியரசு தலைவரிடம் கொடுக்கதான் போகிறோம். எப்படி ஒரு பொய்யான மொழி அரசியலை வைத்து, திமுக அரசியல் செய்துக்கொண்டிருக்கிறார்களோ அதையெல்லாம் உடைத்து, சமக்கல்வி என்பதை பாஜக நிலைநாட்டி கொடுக்கும். சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு, மூன்றாவது மொழி படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளின் வலி எப்படி தெரியும்?

குழந்தை இருக்கக்கூடிய ஒவ்வொரு பெற்றோருக்கும் இதன் அருமை புரியும். கஜினி பட சூர்யாவைபோல, திமுக எம்.பி. கனிமொழி, 2006-2014-ஐ மறந்துவிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும்போது, சமஸ்கிருந்த வளர்ச்சிக்கு ரூ.675 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்கு ரூ.75 கோடி மட்டுமே நிதி வழங்கி உள்ளனர். இதற்கு கனிமொழி முதலில் பதில் சொல்லட்டும். ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்தியை எப்படி வளர்ப்பது என்று நாடாளுமன்றத்தில் 170 பரிந்துரைகளை வைத்தார்.

ஆனால் இப்போது, அவர் இந்தி திணிப்பு பற்றி பேசுகிறார். இந்த கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டிய காலக்கட்டத்துக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு 10 மொழிகளை படிக்க வேண்டும் என்கிறார். அதனால்,தான் ஆந்திராவில் இருப்பவர்கள் உலகளவில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பழைய பஞ்சாங்கத்தை பேசிக் கொண்டிருந்தால், எப்படி உலகத்தை ஆளுவோம். மொழியை தடுப்பதற்கு இவர்களுக்கு உரிமையே இல்லை.

மும்மொழி கொள்கையை எதிர்க்கும் முதல்வர், தமிழகத்துக்குள் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டியது தானே. மூன்றாவது மொழியை யாரையும் படிக்க விடாமல் தடுக்க வேண்டியதுதானே. எதற்காக, இரண்டு விதமான மக்களை உருவாக்குகிறீர்கள். நாடாளுமன்றத்தில் எத்தனை எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல், பல அரசியல் கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.