பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் .இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்…
.கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். இவ்வாறான கூற்றுக்களை கொண்டு பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே இந்தக்கூற்றின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயம் தேசிய பத்திரிகைகளில் பிரதான செய்தியாக, புதன்கிழமை (05) வெளிவந்துள்ளன.
குறிப்பாக ‘ கல்முனை பகுதிகளில் மத அமைப்புக்களினால் பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் அதன் காரணமாக உளவுத்துறையினர் கண்காணிப்புக்களை அதிகரிக்க வேண்டியுள்ளது’ என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த கூற்றினால் எமது பிரதேச மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்றார்..

