உள்ளாட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கூட்டணி தொடரும்: ஜி.கே.வாசன்

336 0

உள்ளாட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கூட்டணி தொடரும் என்று த.மா.கா. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி த.மா.கா. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

மாநில மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், துணைத்தலைவர் டாக்டர் ராமன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 8 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் அத்துமீறல் தொடர்ந்து வருகிறது. இதனை தடுத்து, மீனவர்களுக்கு பாதுகாப்பினை அரசு உறுதிசெய்யவேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) அமைப்பு ரீதியாக 14 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும், நாளை (வெள்ளிக்கிழமை) 18 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் அறிவிக்கப்பட்ட கூட்டணி சுமுகமாக உள்ளதால், உள்ளாட்சி தேர்தலிலும் அது தொடரும். விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் உள்ள தவறான தகவல்களை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் உதயகுமார் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஜி.கே.வாசனை சென்னையில் நேற்று சந்தித்து பேசினர்.

இதுகுறித்து உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், “கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகளை கட்டக்கூடாது, தாமிரபரணி தண்ணீரை விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இதேபோல பல்வேறு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம்” என்றார்.