மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

137 0

மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றவில்லை. நடைமுறைக்கு சாத்தியமற்ற வகையில் வழங்கிய வாக்குறுதிகள் அரசாங்கத்தக்கு இன்று நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு நிவாரணமளிக்கும் சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துக்கு மீனவர்கள் மற்றும் மீனவ சமூகத்தினர் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

வடக்கு , தெற்கு முதல் அனைத்து மாகாணங்களின் மீனவர்களும் இந்த அரசாங்கத்தின் பங்காளர்கள். மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை நிவாரண விலைக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீனவர்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.

ஒரு லீற்றரின் விலை தற்போது 286 ரூபாவாக காணப்படுகிறது. எரிபொருளின் இறக்குமதியின் போது 160 ரூபாவை அமைச்சர் மோசடி செய்வதாக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டது. இதன் மீது நம்பிக்கை கொண்டே மீனவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கினார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் டீசலின் விலையை 160 ரூபாவால் குறைப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. அரசாங்கத்தை அமைத்து 5 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா,ஏதும் இல்லை.மீனவர்களுக்கு இதுவரையில் நிவாரணம் கிடைக்கவில்லை.

மீனவர்களுக்க வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மீன்பிடி படகுகளுக்கு நவீன இயந்திரங்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டது. நன்னீர் மீன்பிடி கைத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.