இன்றைய திருநீற்றுப் புதனுடன் ஆரம்பமாகும் தவக்காலம்

130 0

திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிற­து.

திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது.  “மனி­தா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் எமது நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள்.

இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலத்தின் முதல் நாள் இந்தச் சடங்கின் மூலமாக ஆரம்பமாகின்றது.

“உங்கள் முழு இத­யத்­துடன் என்­னிடம் திரும்பி வாருங்கள் என்­கிறார் ஆண்­டவர்” (யோவேல் 2:12) ‘தவக்காலம்’ என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனதுக்கு ஏற்ப பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய காலம்;  மனிதனின் சுய ஆய்வுப் பயணத்தின் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் விபூ­தி.  விபூ­தி என்பது தவத்தின் தொடக்கம். தவங்கள் எல்லாம் மீட்பில் அடங்குகின்­ற­ன.

தவக்காலத்தில் 16 வயதுக்குட்பட்­டவர்கள் சுத்த போசனமும், 18 வயதுக்கு மேற்பட்டோர், 60 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருக்கலாம்.

உண்ணா நோன்பு

இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வு. `இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்கு முன் 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்தார்.’ இதன் அடிப்படையில் 40 நாட்கள் என்பது மனம் வருந்தி மனமாற்றம் பெற்று, இறைவனின் கொடைகளையும் வரங்களையும் பெறும் காலமாகக் கருதப்படுகிறது.

மனித பாவங்களுக்காக இயேசு இவ்வுலகில் மனிதனாகப் பிறந்து பாடுபட்டு சிலுவையில் உயிர் துறந்தார்.  இதனையே தவக்காலம் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

ஆதித் தாய் தந்தையரான ஆதாம்–ஏவாள், இறை கட்டளையை மீறியதால் பாவம்  செய்ய சாத்தானால் தூண்டப்பட்டனர்.  இதனூடாகவே பாவம் இவ்வுலகுக்குள் பிரவேசித்தது. மனிதன் பாவியானான்.

மானிடரை பாவத்திலிருந்து மீட்க இறைவன் சித்தம் கொண்டார். அதன்படியே தம் சுதனாகிய இயேசுவை இவ்வுலகுக்கு அனுப்பினார். மானிட பாவத்தை மீட்க பரமன் இயேசு பாடுளை அனுபவிக்கவும் சிலுவையில் அறையப்பட்டு மரிக்கவும் பரமபிதா  சித்தமானார்.

இயேசு அனுபவித்த  திருப்பாடுகளின் முதல் நாள் தான் ‘திருநீற்றுப் புதன்’ என அழைக்கப்படுகின்றது. இன்றிலிருந்து எமது தவக்காலம் ஆரம்பமாகின்றது.

இயேசு பாலைவனத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்தது முதல் அவர் கல்வாரி மலையில்,  சிலுவையில் உயிர் துறந்தது வரையான அவரது திருப்பாடுகளை நினைவுகூர்ந்து இன்றிலிருந்து எமது வாழ்வில் ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இறை இயேசுவுக்குகந்த மக்களாக வாழ வரம் வேண்டி தியானிப்போம்.  நாம் அனைவரும் என்றேனும் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம். அதற்கு நம் நெற்றியில் பூசப்படும் சாம்பல் தான் அடையாளம். நாம் மண்ணுக்குள் போவதற்குள் மனம் திருந்தி, நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு, பிறர் மீது வைத்துள்ள கோபம், பொறாமை, வஞ்சகம், பழி வாங்கும் எண்ணம் ஆகியவற்றைத் தவிர்த்து, அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்களைப் பெற்று, நம்முடைய மண்ணுலக வாழ்வை, நாம் செய்யும் இரக்கச் செயல்களால் நிறை­வாக்குவோம். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம்.