தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்

102 0
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்  இன்று செவ்வாய்க்கிழமை (04) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள முரண்பாடு, புதிய அரசாங்கத்தின் பாதீட்டில் தங்களுக்கு நன்மைகள் வழங்கப்படவில்லை என்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஒரு மணித்தியால வேலை நிறுத்தத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.எம். முகமது காமில் கருத்துத் தெரிவிக்கையில்,

சுமார்  ஒன்பது வருடங்களாக நிலவும் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வேண்டியும் மற்றும் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டியுமே இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துளோம்.

எங்களின் நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த ஆர்ப்பாட்டமாகும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் நடத்தப்பட்ட போதிலும், எமது நியாயமான கோரிக்கைகள் கவனிக்கப்படாமலே உள்ளன.

மேலும், சம்பள அதிகரிப்புக்கான சமீபத்திய வரவு –  செலவுத் திட்ட முன்மொழிவுகளில் கூட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அர்த்தமுள்ள நன்மைகளை வழங்கத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது எங்கள் உறுப்பினர்களிடையே நிதி நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

இந்த அடையாள வேலைநிறுத்தத்தின் மூலம், எங்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து நியாயமான தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார்.