இந்த ஆண்டு 1972 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பு

126 0

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள்  ஊடாக இந்த ஆண்டு 1972 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.  எரிபொருள் ஊடான மின்னுற்பத்தியை வரையறுத்து, நீர்மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின்  செயலாற்றுகையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று  மின்சாரத்துறை அமைச்சர்  குமார ஜயகொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று திங்கட்கிழமை (03)  நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்  வலுசக்தி அமைச்சு மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில்   மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  வலுசக்தி துறைக்கு  அதிகளவில் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளன. மின்சாரத்தை  உற்பத்தி செய்வதற்கும், முறையாக விநியோகிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் ஊடாக மின்னுற்பத்தியை   வரையறுத்துக் கொண்டு  நீர்மின்னுற்பத்தி ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்துக்கொள்வதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொரகொல்ல நீர்மின் உற்பத்தி திட்டத்தை  2026 ஆம் ஆண்டுகளில் முழுமைப்படுத்திக் கொள்வதற்கு   திட்டமிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில்  உள்ள மின்னுற்பத்தி மையங்களின் சேவைகளை வினைத்திறனாக்குவதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரத்துறை சபையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு  கொள்கை ரீதியில்  தீர்வு எட்டப்படும்.

எரிபொருள் மற்றும் நிலக்கரி ஊடாக மின்னுற்பத்தியை  இயலுமான அளவு குறைத்துக் கொள்வதற்கு  விசேட திட்டங்கள்  அமுல்படுத்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க சக்தி வள பயன்பாட்டுக்கு புதிய  திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக இந்த ஆண்டு 1972  மெகாவாட் மின்சாரத்தை  உற்பத்தி செய்வதற்கு  எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.