15 நிமிடத்தில் 6 இலட்சத்து ஐம்பதினாயிரத்தை வென்றமை கனவு போலுள்ளது – அந்தனி இரேஷா ராஜலட்சுமி

92 0

 ‘நான் இருபது  வருடங்களுக்கு மேல் கொழுந்து பறித்தல் தொழிலோடு இணைந்துள்ளேன். இம்முறை இடம்பெற்ற கொழுந்து பறித்தல் போட்டியில்  நான் வெற்றி பெற்றமையை  மிகவும் பெருமிதமாக உணர்கிறேன். எமக்கான போட்டி நேரம் 15 நிமிடங்கள். குறித்த நேரத்தில் நான்  இரண்டு பிரிவுகளில் வெற்றியீட்டி  ஆறு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளேன். 15 நிமிடத்தில் இவ்வளவு தொகை பணப்பரிசை நான் வென்றமையை கனவு போல் உணர்கின்றேன். பல வழிகளிலும் என்னை ஊக்குவித்த எனது தோட்ட முகாமையாளர், ஊழியர்கள் மற்றும் தோட்ட கம்பனிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறுகிறார் கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தைச் சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலட்சுமி என்ற பெண்மணி.

ஹேலீஸ் குழுமத்தின், களனிவெலி ,ஹொரண பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் தலவாக்கலை தேயிலை பெருந்தோட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் வரும் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் ,   சிறந்த  கொழுந்து பறிப்பாளர்களுக்கான போட்டி நிகழ்வு சனிக்கிழமை முதலாம் திகதி ரதல்ல பெருந்தோட்டத்தில் இடம்பெற்றது.  அதில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் அவ்வாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இப்போட்டியில் அறுபது தோட்டங்களைச் சேர்ந்த ஐம்பது பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பதினைந்து நிமிடங்களில்  அதிக எடை கொழுந்து மற்றும் சிறந்த  கொழுந்து கொய்தல் செயன்முறையில் கீழ் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  வெற்றியாளர்களை தீர்மானிக்கும் குழுவினராக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விளங்கினர்.

இவ்வருடம் இப்போட்டியில்  தலவாக்கலை  பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் வரும் கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச்  சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலட்சுமி  வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டதுடன்  அவர் மொத்தமாக  ஆறு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா  ரொக்கப்பரிசையும் சிங்கர்   ஒலியிசை  உபகரணத்தையும் பெற்றுக்கொண்டார்.  இந்நிகழ்வுகளில் ஹேலிஸ் குழுமத்தின் தலைவர் மொஹான்  பண்டிதகே  மற்றும் ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை,  முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஹேலிஸ் குழுமமானது    ஒவ்வொரு வருடமும் சிறந்த கொழுந்து பறிப்பாளர்களுக்கான போட்டியை நடத்தி ஊழியர்கள் மற்றும் கொழுந்து பறிக்கும் தொழிற்றுறையோடு இணைந்திருப்பவர்களை   ஊக்குவிக்கும் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.