வாகரையில் மூர்க்கத்தனமாக செயற்பட்ட வனவளத்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்

77 0

வாகரைப் பிரதேசத்தில் வனவளத்துறை  திணைக்களம் சேனைப்பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மக்களின் குடிசைகளை எரித்து, சொத்துக்களை அழித்து மிக மூர்க்கத்தனமாக  தாக்கி விளைச்சல்களையும் களையும் எடுத்து சென்றுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் வனவளத்துறை  திணைக்களத்துக்கு  எதிராக விசாரணை நடத்தி  குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமென  இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீநாத் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01)  நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு, செலவுத் திட்டத்தின்   நீதி மற்றும்  தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில்   அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின்    சிறந்த    நிலைபேறான    தன்மைக்கு    நீதித்துறையின் சுயாதீனம்    அத்தியாவசியமானது.  மட்டக்களப்பில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. அதற்கு அப்பால் களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை,ஏறாவூர் போன்ற இடங்களில் நீதிவான் நீதிமன்றங்கள் உள்ளன.

இதில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்திலும் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திலும் மட்டுமே நிலையான கட்டிடங்கள் உள்ளன. வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது மந்த கதியில் தான் காணப்படுகிறது. இதனை நீதி அமைச்சர் தனது கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஏறாவூர் நீதிமன்றம்  20 வருடம் பழமையான மிக சிறிய கட்டடத்திலேயே  இயங்கிக் கொண்டிருக்கின்றது. சான்றுப் பொருட்களை வைப்பதற்கான இடங்கள் கூட இல்லை. அருகில் உள்ள கோயில் வளாகத்தில் சான்றுப்பொருட்களை வைக்கின்றனர். எனவே உரிய காணி ஒதுக்கப்பட்டு புதிய நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

வாகரைப் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்றுள்ளது. அது மாதத்தில் முதலாம், மூன்றாம் புதன்கிழமைகளில் மட்டும் இயங்கி வருகின்றது. ஒரு தற்காலிக பாதுகாப்பற்ற கட்டடத்திலே இயங்கிக்கொண்டிருக்கின்றது குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டட சிதைவுகளும் ஏற்பட்டன. இங்கு குடிநீர் வசதியோ உரிய மலசலகூட வசதியோ இல்லை. நீதிபதிகள் கூட தண்ணீரை கொண்டு சென்று குடிக்க வேண்டிய நிலையுள்ளது.

இவ்வாறான நிலைமைக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும்.  அத்துடன் ஆளணிப் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் இருக்கின்ற பதிவாளர் தற்போது ஓய்வு பெறவுள்ளார். இன்னொரு நீதிமன்றத்தில் பதிவாளர் இல்லை.

வாழைச்சேனை. ஏறாவூர் நீதிமன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.தேவையான ஆளணி வளம் இல்லாமல் நீதிமன்ற செயற்பாடுகளை கிராமமாகமுன்னெடுப்பதில் பாரிய பிரச்சினைகள் உள்ளன.  இதனால் மக்களும் அவதிக்குளாகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில்   பாரிய இட நெருக்கடி காணப்படுகிறது. 300 கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 700க்கும் மேற்பட்ட கைதிகள்  இருக்கின்றனர். கழிவு முகாமைத்துவம் ஒரு பாரிய பிரச்சினையாக வாவியில் விடப்படுகின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியிருந்தாலும் கூட நீண்ட கால அடிப்படையில் அந்த இடத்தை மாற்றியமைத்துத் தரவேண்டும்.

வாகரைப் பிரதேசத்தில் வனவளத்துறை  திணைக்களம் சேனைப்பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மக்களின் குடிசைக்களை எரித்து, சொத்துக்களை அழித்து மிக மூர்க்கத்தனமாக  தாக்கி சேனைப்பயிர்களையும் எடுத்து சென்றுள்ளார்கள். இது தொடர்பில் நியாயம் கேட்க சென்றவர்கள் ஆயுதமுனையில் மிரட்டப்பட்டுள்ளார்கள்.

இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் பிரதேச செயலருக்கும்  அறிவித்திருந்தோம். இச்சம்பவம் தொடர்பில் வனவளத்துறை  திணைக்களத்துக்கு  எதிராக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.