நாட்டின் கிழக்கு, தென், ஊவா ஆகிய மூன்று மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகுமென குறிப்பிட்டுள்ளது.
வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் போதும், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

