திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்கள், தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் வெள்ளிக்கிழமை (28) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கானது மூதூர் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (28) நகர்த்தல் பத்திரத்தின் மூலம் நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டு பிணைக்கான விண்ணப்பம் செய்யப்பட்டபோது தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அந்தவகையில் திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேருக்கும் பிணை வழங்கப்பட்டு இன்று சனிக்கிழமை (01) குறித்த நபர்கள் சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகனங்களினுடைய சாரதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (28)பிணை வழங்கப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் குமாரபுரம் பகுதியில் சேருவில பகுதியில் இருந்து தெகிவத்தை நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனமும் திருகோணமலையில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் 24.02.2025 காலை விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவத்தில் பூமரத்தடிச்சேனையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணும் குமாரபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனும் காயமடைந்தனர்.
இதன்பின்னர் பிக்கப் வாகன சாரதியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைலப்பாக மாறியதால் தெகிவத்தை பகுதியில் இருந்து ஆயுதங்களுடன் வருகை தந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குமாரபுரம் கிராமத்திற்குள் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிஸார் தெகிவத்தைப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரையும் தொடர்ச்சியாக கைது செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

