மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அரச துறையில் இருந்து கிடைக்கின்றதா அல்லது தனியார் துறையில் இருந்து கிடைக்கிறதா என பார்க்காது எந்தவொரு தடங்கலுமின்றி அனைவருக்கும் சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மெடி கெயார் நிகழ்ச்சியின் பிரதான நோக்கங்களாக 05 உள்ளன. அதில் ஒன்று தான் சுகாதாரதத் துறை பற்றி மக்களுக்கு தெளிபடுத்தலாகும். இது மிக முக்கியமாதொன்று என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பு – பண்டாரநாயக்க ஞபகார்த்த மாநாட்டு மண்டபத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு கண்காட்சிக் கூடத்தில் (BMICH) வெள்ளிக்கிழமை (28) மெடிகெயர் – 2025 இலவச மருத்துவ கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.


2025ம் ஆண்டுக்கான மெடிகெயர் இலவச மருத்துவ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, நவலோக்க வைத்தியசாலையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜயந்த தர்மதாஸ், இலங்கை வைத்தியதுறை சங்கத்தின் தலைவர் பிரசாத் கட்டுலந்த, மற்றும் பல்வேறு வைத்திய நிபுணர்கள் கலந்துக்கொண்டனர்.




இலவச மருத்துவ கண்காட்சியில் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியிலான வைத்தியசாலைகள் வைத்திய துறைசார் நிறுவனங்கள் தங்களது சேவைகள் தொடர்பான விளக்கங்களை மக்களுக்கு வழங்கின. இந்த மருத்துவ கண்காட்சியானது வெள்ளிக்கிழமை (28), சனிக்கிழமை ( 01), ஞாயிற்றுக்கிழமை (02) என தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு நடைபெறுகிறது.
மெடிகெயர் இலவச மருத்துவக் கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிகழ்விற்கு வருகைதந்திருக்கும் எமது சுகாதாரத்துறையின் வளர்ச்சிக்கு எப்பொழுதும் இராஜதந்திர முறையில் கைகொடுக்கும் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர், ஐக்கிய இராஜ்ஜிய தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய தூதரகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், இலங்கையின் சுகாதத்துறை சார்ந்த அனைருக்கும் எனது வணக்கம்.
மெடி கெயார் 2025 நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் நாட்டின் சுகாதாரத்துறையின் மிக முக்கியமான ஒரு மைல் கல்லாக இந்த இலவச மருத்துவ கண்காட்சி அமைகின்றது.
அதனால் சுகாதார அமைச்சராக உங்களுடன் இணைந்துகொள்வதையிட்டு சந்தோஷமடைகின்றேன். நம் அனைவரும் அறிந்த விடையம் தான் உலகில் அதுவும் ஆசியாவில் முக்கியமாக நம் நாடு சுகாதார துறையில் முன்னணியில் உள்ளமை.
அது வெறும் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கவில்லை. மாறாக பல தசாப்தங்களாக இலங்கையில் சுகாதாரத்துறை சார்ந்த அனைவரினதும் தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்பிற்காக கிடைத்த ஒரு இடம்.
அதேபோன்று நாடு விழுந்திருக்கும் போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எமக்கு உதவியிருந்தன. அதை நாம் கொரோனா காலத்தில் அவதானித்திருந்தோம்.
அதனால் ஒரு சக்திமிக்க சுகாதாரத்துறை ஒன்றை நாம் பெற்றிருந்தோம். அதனை கருத்தில் கொண்டு இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் மகாணசபை சுகாதாரத் திட்டங்களுடன் 604 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.
ஆனால் இந்த நிலையை நாம் அடைவதற்கு தனியார் சுகாதார சேவைகள் வெற்றிக்கு உதவியுள்ளன. தனியார் சுகாதார சேவைகள் இல்லாதிருந்தால் நமக்கு இந்த வெற்றிநிலையை அடைந்திருக்க முடியாது. தனியார் வைத்தியசாலைகள், இரசாயன பரிசோதனை கூடங்கள் என அனைத்தும் பிரதான இடங்களை வகிக்கின்றன.
அதனால் சுகாதாரத் துறையில் இருக்கக் கூடிய நாங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம். மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அரச துறையில் இருந்து கிடைக்கிறதா அல்லது தனியார் துறையில் இருந்து கிடைக்கிறதா என பார்க்காது எந்தவொரு தடங்கலுமின்றி அனைருக்கும் சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மெடி கெயார் நிகழ்ச்சியின் பிரதான நோக்கங்களாக 05 உள்ளன என நான் அறிவேன், அதில் ஒன்று சுகாதாரத் துறை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தல் என்பது. அது மிக முக்கியமான ஒன்று. அரசாங்கம் மிகப்பெரிய நிதித் தொகையினை சுகாதார துறைக்காக ஒதுக்கினாலும் அந்த ஒவ்வொரு ரூபாவிற்கும் ஏற்ற சேவை எமக்கு கிடைப்பதில்லை.
இதனை நிவர்த்தி செய்ய இந்த தெளிவுபடுத்தல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த முறையும் மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை பொருட்களுக்கு 185 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளோம். இந்த ஒவ்வொரு ரூபாவும் சரியாக பயன்படுத்தப்பட்டால் இதைவிட சிறப்பான இடத்திற்கு இந்த சுகாதாரத் துறையயை உயர்த்திவிட முடியும்.
இதைபற்றி அனைத்தையும் கூறாவிட்டாலும் முக்கியமாக ஒரு முக்கிய பகுதி உள்ளது அதுதான் மருத்துவ சுற்றுலா. உலகின் மருத்துவ சுற்றுலாவின் மையமாக நம் நாட்டை மாற்ற முடியும். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இன்னும் இரண்டு வருடங்களில் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் 06 மில்லியனாக உயரக்கூடும்
அதுவே எமது எதிர்பார்ப்பு. சிலவேளைகளில் 03 வருடங்களும் ஆகலாம். மருத்துவ சுற்றுலாவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையில் வளர்ச்சியை கொண்டுவர முடிந்தால் அது நம்நாட்டின் பொருளாதாரத்திற்கும் பல வகையில் உறுதுணையாக இருக்கும்.
தேசிய வைத்திய முறைகளில் எமக்கு சிறந்த இடம் இருக்கின்றது. அதனுடன் நவீன முறைகளும் எங்களின் நிபுணத்துவமும் இணைந்தால் இதை நமக்கு செய்ய முடியும். அதனால் தனியார் துறை வைத்திய நிறுவனங்களை நான் அன்புடன் அழைக்கின்றேன். மருத்துவ சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுங்கள் என்றார்.

பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே தெரிவிக்கையில்,
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
2025 ஆம் ஆண்டுக்கான மெடிகெயர் இலவச மருத்துவ கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு, ஏற்பாட்டுக் குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
மேலும் மெடிகெயரின் 14 ஆவது ஆண்டாக இந்த நிகழ்வு நடைபெறுவதையும், இது தொடர்ந்து வளர்ந்து வரும் நிகழ்வாக இருப்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மெடிகெயர் இலவச மருத்துவ கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட இந்திய வைத்திய நிறுவனங்கள், பங்கேற்பதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்தியா மற்றும் இலங்கை பல நூற்றாண்டுகளாக சிறப்பான வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியிலான கூட்டுறவை பகிர்ந்து வந்துள்ளன. இந்தியா மற்றும் இலங்கைக்கான உறவு பொருளாதார வளர்ச்சி, மக்களின் நலன் மற்றும் எதிர்கால நம்பிக்கைகளை ஒன்றாக இணைக்கிறது.
வைத்தியத் துறையானது இந்தியா – இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக கூட்டுறவின் முக்கியமான தூணாக விளங்குகிறது. இது பெரும் நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளது.
இதற்கு உதாரணமாக, இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரி மூலம் அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்பட்டதை நினைவுகூரலாம்.
மேலும், இந்திய மக்களின் முழு தடுப்பூசி திட்டத்திற்கு முன்பாகவே இலங்கை COVID-19 தடுப்பூசிகளை பெற்ற முதல் நாடுகளில் ஒன்றாக இருந்தது என்பதும் நினைவிருக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் இந்தியா மருந்து உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது இடத்திலும், முதலீட்டு மதிப்பில் 13 ஆவது இடத்திலும் உள்ளது. மேலும், இந்தியா தற்போது உலகளவில் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முதன்மையான நாடாக இருக்கிறது.
இந்திய மருந்துவத் துறையில் மற்றொரு வளர்ந்து வரும் துறை டிஜிட்டல் துறை ஆகும். இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் ஒரு மிகப் பெரிய முன்னோடியாக உள்ளது.
அரசியல் நிபுணர்கள், மருத்துவச் சேவை வழங்குநர்கள், தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் மற்றும் பல தரப்பினரும் இணைந்து மாறுபட்ட, செயல்திறன்மிக்க மருத்துவ அமைப்பை உருவாக்க முடியும்.
மருத்துவத் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட ஒருவராக, இந்திய அரசின் பிரதிநிதியாக இந்த இலவச மருத்துவ கண்காட்சி நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததையிட்டு எனக்கு பெருமையாகவுள்ளது.
இலவச மருத்துவக் கண்காட்சியானது வெற்றிகரமாக நடைபெற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.

மேலும் இந்த இலவச மருத்துவ கண்காட்சியில் இந்தியாவின் தமிழகத்தின் முதற்தர செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சி மையமான பிரசாந்த் செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம் இணைந்திருந்தது.
பிரசாந்த் செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம் (Prashanth Fertility Research Centre) என்பது இந்தியாவின் தமிழகத்திலுள்ள முதற்தர செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சி மையமாக விளங்குகிறது.
2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரசாந்த் செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம் குழந்தையின்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வினை வழங்குகிறது.
பிரசாந்த் செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்தில் , இந்தியாவின் சிறந்த பெண் மருத்துவரும் மகப்பேற்று நிபுணருமான வைத்தியர் கீதா ஹரிப்ரியா முன்னணி இடம் வகிக்கின்றார்.
உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற பிரசாந்த் செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்திற்கு குழந்தையின்மை பிரச்சனைக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள உலகம் முழுவதிலிருந்தும் பலர் சிகிச்சைகளுக்காக வருகை தருகின்றனர்.
சுமார் 25 வருடங்களாக இலங்கையை சேர்ந்த குடும்பங்களுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளையும் உலகளாவிய ரீதியில் கடந்த 45 வருடங்களுக்கு மேல் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளையும் உருவாக்க பிரசாந்த் செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம் உறுதுணையாக விளங்கியிருப்பது சிறப்புக்குறியதாகும்.
பிரசாந்த் செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்தின் சிறந்த பெண் மருத்துவரும் மகப்பேற்று நிபுணருமான வைத்தியர் கீதா ஹரிப்ரியா செயற்கை முறை கருத்தரிப்பு குறித்து விளக்கங்களையும் வழங்கினார்.






