அம்பலாங்கொடை இரட்டைக்கொலை – நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்

128 0

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரவத்த பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அம்பலாங்கொடை, உரவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணும் பெண்ணும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகளை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்த உதவிய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று செவ்வாய்க்கிழமை (25) சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் பொல்ஹுன்னாவ, படபொல பகுதியைச் சேர்ந்தவர் எனவும்,  தப்பிச் செல்வதற்கு துப்பாக்கிதாரிகள்  பயன்படுத்திய காரின் சாரதி எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.