மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு சந்தேகநபர் கைது

150 0

மித்தெனிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (25) காலை வீரகெட்டிய, வாகமுல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மொத்தம் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி இரவு மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் தனது இரு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மகன் மற்றும் மகள் எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார், மறுநாள் ஒன்பது வயது மகன் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.