கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் கால வரையறையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கருத்திட்டக் கண்காணிப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் மற்றும் பயன்பாட்டு சேவைகள் ஒருங்கிணைப்புக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் சீ.எச்.ஈ.சீ. துறைமுக நகர நிறுவனத்தை இணைப்புச் செய்வதற்கான பிரதான அலகாக, கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகு இயங்கி வருகின்றது.
இக்கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் 2027 ஜூன் மாதமளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால், கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் தொழிற்பாட்டுக் காலத்தை 2027.06.05 வரை நீடிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

