நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க தைரியமாக தீர்மானங்களை எடுத்ததாலே நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர முடியுமாகி இருந்தது. அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் இந்த நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்கால அரசியல் தொடர்பில் சிந்திக்காமல் உறுதியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வீழ்ச்சியடைந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடையாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதார மற்றும் நிதி ஒழுக்கத்துடன் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வேலைத்திட்டத்தை உருவாக்குவது அவசியமாகும். இதில் உள்ளூர் அறிஞர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் அமைச்சரவை முடிவுகளை எடுத்து, துணிச்சலான தீர்மானங்களை மேற்கொண்டு வீழ்ச்சியடைந்துள்ள இந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .
2022இல் நாட்டை பொருப்பேற்க யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங்க முன்வந்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். அன்று ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இருந்த வரிசை யுகத்தை முடிவுக்கு கொடுண்டுவர அச்சமின்றி தீர்மானங்களை எடுத்தார். இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக அவர்
அந்த முடிவுகளை எடுத்தார். எதிர்காலத்தில் வரும் தேர்தல்களை பற்றி சிந்திக்கவில்லை. அவ்வாறான முடிவுகளை நாம் மீண்டும் எடுக்க வேண்டும்.
மக்கள் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கின்றனர். என்றாலும் தேர்தல் காலத்தில் என்ன சொன்னாலும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை அவ்வாறே செல்வதையிட்டு பாராட்டுகிறேன். என்றாலும் நாணய நிதியம் சொல்லும்
அனைத்துக்கும் நாங்கள் இணங்கவேண்டியதில்லை. எமது பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதை நாங்கள் உணர்ந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாடு என்றவகையில் நாங்கள் 2958 பில்லியன் ரூபா பெற்றுக்கொண்ட கடனுக்காக வட்டி செலுத்தி வருகிறோம். நாட்டின் செலவுகளுடன் இதனை ஒப்பிட்டு பார்க்கையில் இது நூற்றுக்கு 45 வீதமாகும். அதேபோன்று இதனை நாட்டின் வருமானத்துடன் ஒப்பட்டு பார்க்கையில் அது நூற்றுக்கு 62 வீதமாகும். உலகில் அதிக வட்டி செலுத்தும் நாடாக எமது நாடு பதிவாகி இருக்கிறது.
மேலும் ஜனாதிபதி யாழ்ப்பாணம் செல்லும்போது தரை மார்க்கமாக செல்லாமல் ஹெலிகப்டரில் செல்லுமாறு இந்த சபையில் தெரிவித்திருந்தேன். அது பொறாமையில் சொல்லவில்லை. 6 மணி நேரம் அவர் பாதையில் இருப்பது என்பது, 6மணி நேரத்துக்கு அவரால் தீர்மானங்களை எடுக்க முடியாமல் போகிறது. அதேபோன்று சபாநாயகரின் வீடு மூடப்பட்டிருக்கிறது.
அது பயன்படுத்தவே வழங்கப்பட்டிருக்கிறது. அதனை பயன்படுத்தவில்லை என்பதால் செலவு குறைந்திருக்கிறதா?. இவ்வாறான வளங்கள் பயன்படுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மாறாக நூதனசாலையாக மாற்றுவதற்கு அல்ல.
அத்துடன் கடந்த காலத்தை குறைகூறிக்கொண்டிருக்காமல் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டும். வரவு செலவு திட்டமும் ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவு திட்டத்தின் தொடராக இருப்பதாகவே காண்கிறேன் என்றார்.

