முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் ஆயுள் காப்புறுதிப்பத்திரங்கள் அடங்கிய சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பெற்றுக்கொடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (24) உத்தரவு பிறப்பித்தது.
தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்தமை மற்றும் அதனை மருத்துவ விநியோகப்பிரிவுக்கு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வங்கிக் கணக்குகள் மற்றும் 3 ஆயுள் காப்புறுதிப்பத்திரங்களை கடந்த வருடம் ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தடை செய்திருந்தது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி 3 மகள்மார் மற்றும் மருமகனின் ஆயுள் காப்புறுதிகளும் தனிப்பட்ட வங்கிகளிலுள்ள கணக்களும் இவ்வாறு தடைசெய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் தடையுத்தரவு நீடிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் அடுத்த கட்ட விசாரணைகளும் முன்னெடுக்கபடுமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததுடன் இதன்போது முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி தமது சேவை பெருநர்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களின் சான்றுறைக்கப்பட்ட பிரதிகளை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே குறித்த சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களின் சான்றுறைக்கப்பட்ட பிரதிகளை வழங்குமாறும் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்

