நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாத அமைச்சர்களின் இயலாமை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. இயலாமையை மறைப்பதற்காக பெண்கள் மீது அவதூறு பரப்பும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
சனிக்கிழமை (22) பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஹேவகேவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாத அமைச்சர்களின் இயலாமை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை அமர்வின் போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பில் நாம் கேள்வியெழுப்பும் போது அவற்றுக்கு பதிலளிக்க முடியாமல் தமது இயலாமையால் எம்மீது அவதூறு பரப்புகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மக்கள் இவர்களை தெரிவு செய்துள்ளனர். அவ்வாறிருக்கையில் ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி இவர்கள் செயற்படுவது நாட்டின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஹேவகேவின் உண்மையான இயல்பு பெண்கள் மீது அவதூறு பரப்புவதாகும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க அதன் பின்னர் ஆசிரியைகளின் ஆடை பற்றிய சர்ச்சைகளின் போது இவர் பெண்களை அவமதிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். ரோஹினி குமாரி விஜேரத்ன என்பதே எனது பிறப்புச்சான்றிதழில் பெற்றோர் எனக்கு வைத்த பெயராகும்.
1994ஆம் ஆண்டு நான் திருமணம் செய்து கொண்டதன் பின்னர் கவிரத்ன என்ற பெயரும் எனது முழுப் பெயருடன் சேர்க்கப்பட்டது. அதனை விடுத்து நான் பத்திரிகையில் விளம்பரத்தின் ஊடாக பெயர் மாற்றம் செய்யவில்லை. எனவே நீங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டதைப் போன்று நான் பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

