ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடையாக இருக்கும் அரசாணை விதிகளை மறுஆய்வு செய்ய இதுவே சரியான தருணம் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ராஜ்குமார் (41) என்பவர், நன்னடத்தை அடிப்படையிலும், 14 ஆண்டுகள் சிறை தண்டனையை பூர்த்தி செய்து வி்ட்டதாலும் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தமிழக அரசு, கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையுடன், வரதட்சணை கொடுமை வழக்கிலும் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனையை பூர்த்தி செய்யவில்லை என கூறி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து கடந்த 2024 ஜூன் 22-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அதி்ல் வரதட்சணை கொடுமைக்கான 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கெனவே ஆயுள் தண்டனையுடன் ஏக காலத்தில் அனுபவித்து விட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முகமது சைஃபுல்லாவும், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜூம் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு பி.வீரபாரதி வழக்கில் தெளிவான வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அதன்படி மனுதாரர் வரதட்சணை கொடுமைக்கான குறைந்தபட்ச தண்டனையை ஏற்கெனவே அனுபவித்துவி்ட்டதால் ஆயுள் தண்டனை கைதியான அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய எந்த தடையும் இல்லை. எனவே, மனுதாரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
அத்துடன், ‘‘குறைந்தபட்ச தண்டனை விதிக்க வகை செய்யும் சில சட்டப் பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்படுவோர் முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதியானவர்கள் அல்ல என கடந்த 2021 நவ.15-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை, ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடையாக இருக்கிறது. அதனால், அந்த விதிகளை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம்’’ என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

