காணி உரிமை வழங்காமல் மலையக மக்களுக்கு எத்தனை வீடுகளை அமைத்துக்கொடுத்தாலும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதனால் அரசாங்கம் காணி உரிமை வழங்குவதாக தெரிவித்தால் வரவு, செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மலையகத்தில் ஸ்மாட் வகுப்பறை அமைப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த ஸ்மாட் வகுப்பறை இந்திய அரசாங்கத்தின் ஊடாக எமக்கு வழங்கப்படும் நன்கொடை. மாறாக இலங்கை அரசாங்கம் அங்கு ஸ்மாட் வகுப்பறை அமைப்பதில்லை. இதற்காக இந்திய அரசாங்கத்துக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் வரவு செலவு திட்டத்தில் இவர்கள் ஸ்மாட் வகுப்பறை அமைப்பதற்கு 266 மில்லியன் ருபாவே ஒதுக்கி இருக்கிறார்கள். இந்த பணத்துக்கு எப்படி ஸ்மாட் வகுப்பறை அமைக்க முடியும் என கேட்கிறேன்.
அத்துடன் வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ருபா வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அன்று 1700 ரூபா பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தபோது ஜீவன் தொண்டமான் காட்டிக்கொடுத்துவிட்டார். நாங்கள் 2,138 ரூபா பெற்றுக்கொடுப்போம் என அன்று எதிர்க்கட்சியில் இருந்த அனைவரும் தெரிவித்தார்கள். இப்போது ஜனாதிபதி 1,700 ரூபா பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தபோது அதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.இது நியாயமா? என்னை பொருத்தவரை அது தனியார் துறை.அவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தே இதனை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் தெரிவித்த 1,700ரூபா சம்பளம் 1,350 ரூபா அடிப்படை சம்பளமும் 350 ஊக்குவிப்பு கொடுப்பனவும் என்ற அடிப்படையிலாகும். ஆனால் ஜனாதிபதியோ யாராக இருந்தாலும் முடிந்தால் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி அடிப்படை சம்பளத்துக்கு ஒரு ரூபா அதிகரித்து காட்டுங்கள் என சவால் விடுகிறேன்.
அது முடியாது என்பது எங்களுக்கு தெரியும். பெருந்தோட்ட மக்கள் இலங்கை பிரஜைகளாக நடத்தப்படுவதில்லை. மாறாக பெருந்தோட்ட கம்பனிகளில் பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் அதற்கு பெருந்தோட்ட முகாமையாளரே அதற்கு அனுமதி வழங்கவேண்டும். இதனை மாற்றியமையுங்கள். அதனால் கடந்த அரசாங்கத்தையோ என்னை திட்டுவதாலே மலையய மக்களின் வாழ்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. அதனால் அவர்களின் விடயத்தில் நிலையான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறே தெரிவிக்கிறேன்.
மேலும் இந்த வரவு செலவு திட்டம் ஒரு கண்கட்டி வித்தையாகும். எனெனில்,அரசாங்கம் மலையகத்தில் உட்கட்டமைப்பு வசதிக்கு 1800 மில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறது. ஆனால் நான் அமைச்சராக இருந்தபோது காணி உரிமை திட்டத்துக்கு 4ஆயிரம் மில்லியன் ரூபா ஒக்கி இருந்தேன். அதில் இரண்டாயிரம் மில்லியன் ரூபாவே அதற்கு செலவிடப்பட்டு மிஞ்சிய 2ஆயிரம் ரூபாவை உட்கட்டமைப்பு வசதிக்கு ஒதுக்கி இருந்தேன். ஏற்கனவே 2ஆயிரம் மில்லியன் ரூபா அங்கு இருந்தது. என்றாலும் அந்த பணத்தை கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு ஒதுக்கியிருந்தேன். ஆனால் தற்போது அந்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, மீணடும் புதிய வேலைத்திடம் கொண்டுவந்திருக்கிறது. அதில் பிரச்சினை இல்லை.
ஆனால் இந்த 1,800 மில்லியன் ரூபாவை கல்விக்கும் சுகாதாரத்துக்கும் ஒதுக்கினால் அங்கு பெரிய மாற்றம் வரும். அதனையும் விட நாங்கள் எதிர்பார்க்கின்ற மாற்றம் வரவேண்டு்ம் என்றால், மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும், என்றாலும் காணி உரிமை பத்திரம் வழங்க நிதி ஒதுக்கி இருப்பதை இங்கு காணவில்லை. அதேநேரம் தேயிலை உட்பத்தி மூலம் நாட்டின் மொத்த வருமானத்துக்கு மலையக மக்கள் 12 சத வீதத்தை வழங்குகிறார்கள். ஆனால் வரவு செலவு திட்டத்தில் மலையகத்துக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கி இருக்கிறது. ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி ஒதுக்கீட்டில் 67வீதம் இந்திய அரசாங்கம் கொடுக்கின்ற பணமாகும். அதனால் மலையக மக்களுக்கு போதுமான அங்கிகாரம் கிடைக்கவில்லை என்றே தெரிவிக்கிறேன்.
அத்துடன் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்காமல் எத்தனை வீடுகளை கட்டினாலும் அவர்களின் பிரச்சினை தீரப்போவதில்லை. அவர்களுக்கு என காணி உரிமை இருந்தால் அதனை வைத்துக்கொண்டு அவர்கள் கல்வி மற்றும் ஏனைய அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள். இதனை நாங்கள் கெஞ்சிக்கேட்பதில்லை. உரிமையுடன் கேட்கிறோம். இந்த இடத்தில் நாங்கள் 200 வருடங்களாக இருக்கிறோம்.
மலையகத்தில் 1972ஆம் ஆண்டில் இருந்து 66ஆயிரம் தனி வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.அதில் 15ஆயிரம் வீடுகளுக்கே காணி உரிமை பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் அரசாங்கம் தங்களின் இந்த ஆட்சிக்காலத்துக்குள் மீதமிருக்கும் 50ஆயிரம் வீடுகளுக்கும் காணி உரிமை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். காணி உரிமை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்தால் இந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றார்.

