நாட்டின் நிதியியல் ஸ்திரத்தன்மை இன்னமும் விசேடமாகக் கவனத்திற்கொள்ளப்படவேண்டிய நிலையில் இருப்பதாகவும், அதுசார்ந்த அச்சுறுத்தல் நிலை தொடர்வதாகவும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான ‘ஃபிட்ச் ரேட்டிங்ஸ்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், வரவு, செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் வருமானம் ஈட்டல் வழிமுறைகள் திட்டமிடப்பட்டவாறு நடைமுறைப்படுத்தப்படின், அது நாட்டின் கடன் நிலைவரத்தில் நீண்டகாலமாக நிலவும் குறைபாடுகளை சீரமைப்பதற்கு உதவும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும் கடன்கள் மற்றும் வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறை என்பவற்றைக் குறைப்பதனை மந்தகதியில் முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம், நடுத்தரகாலத்தில் கடன்தொகையை வீழ்ச்சியுறச்செய்வதற்கான முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரித்துள்ளது.
அதேபோன்று உயர் இறக்குமதி செயன்முறையினால் வெளிநாட்டுக்கையிருப்பின் அளவு வீழ்ச்சியடைதல் உள்ளடங்கலாக இலங்கையின் வெளிநாட்டுத்துறை ஸ்திரத்தன்மை வலுவிழக்கக்கூடும் எனவும், ஆகவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் மேற்படி கடன்தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கடன் அளவைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்படாதவிடத்து, அது இலங்கையின் கடன் நிலைவரத்தில் அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் என்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

