முதல்நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் – தவறான நடைமுறையாகிவிடும்! -சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

111 0

சிவராத்திரிக்கு மறுநாள் 27ம் திகதி  விடுமுறை வழங்கப்படுவது முதல்நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும்.  இது சிவராத்திரி விரத அனுட்டான விதிக்கு முற்றிலும் முரணானதாகும் என சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பாடசாலைகளுக்கு சிவராத்திரிக்கு மறுநாள் 27 ஆம் திகதி விடுமுறை என  வடமாகாண ஆளுநர் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும்  மஹா சிவராத்திரியை முன்னிட்டு  27ஆம் திகதி வியாழக்கிழமை  இலங்கை வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

எனினும்,  மஹாசிவராத்திரி விரதம் 26 புதன்கிழமை  என்பதால் மாணவர்கள் அன்றைய தினமே சிவாலய வழிபாடு செய்யவது உத்தமமாகும்  என்பதுடன் அதுவே சரியான முன்னுதாரணமாகும்.

27 ஆம் திகதி  சிவராத்திரி மறுநாள் விடுமுறை வழங்கப்படுவது முதல் நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும். இது சிவராத்திரி விரத அனுட்டான விதிக்கு முற்றிலும் முரணானதாகும்.

பொதுவாக சிவராத்திரியன்று காலை முதல் விரதம் நோற்று  விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து மறு நாள் சூரிய அஸ்தமனத்தின் பின்பே உறங்கவேண்டும் என்பது விரத நியதியாகும்.

இவ் விடயத்தை மீள் பரிசீலனை செய்து  26 ஆம் திகதி விடுமுறை வழங்க வேண்டுமென வேண்டுகோள் ஒன்றை  வட மாகாண ஆளுநருக்கு முன் வைத்துள்ளோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.