நீதிமன்றில் துப்பாக்கிச்சூடு – மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடா?

137 0

இன்று காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி வேடமணிந்த துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு குறைபாடு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார்.

சட்டத்தரணி போல் வேடமணிந்த சந்தேக நபர், சட்டத்தரணிகளின் மேஜையில் அமர்ந்திருந்தார், பின்னர் கணேமுல்ல சஞ்சீவ தனது தடுப்புக்காவல் நிலை தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றக் கூண்டுக்குள் நுழைந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கடுமையான காயங்களுக்கு ஆளான கணேமுல்ல சஞ்சீவ, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

​​செப்டம்பர் 13, 2023 அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், சிறை அதிகாரிகள் அவரை சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம், நாட்டின் மிகவும் பலத்த பாதுகாப்புடன் கூடிய நீதித்துறை வளாகங்களில் ஒன்றான புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்