ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர் பதவி வழங்கவில்லை?

147 0

ஐக்கிய மக்கள் சக்தியின் இவ்வாண்டுக்கான மாவட்ட தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது கொழும்பு மாவட்ட தலைவர் பதவி பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அப்பதவியை தனதாக்கிக் கொண்டார். இது குறித்து கலாநிதி ஹர்ஷ, அதிருப்தியாகவே ஊடங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். ஹர்ஷ டி சில்வாவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்படவில்லை என்று ஊடகவியலாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கேள்வியெழுப்பினர். அதற்கான காரணத்தைக் குறிப்பிடுமாறும் மீண்டும் மீண்டும் சஜித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘எவ்வித பிரச்சினையும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மொனராகலை மாவட்ட தலைவர், நான் கொழும்பு மாவட்ட தலைவர். ஹர்ஷ எமது அரசாங்கத்தில் நிதி அமைச்சராவார். நீங்கள் தலைப்புக்களுக்காகவும், ஊதியத்துக்காகவும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கேள்வியெழுப்பாதீர்கள். உங்களது ஊதியத்தை அதிகரிக்குமாறு உங்களுக்கான தொழில் வழங்குனர்களிடம் பரிந்துரைக்கின்றேன்.’ என்றார்.

மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன, அநுராதபுர மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, புத்தளம் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, காலி மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, கம்பஹா மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, குருநாகல் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, களுத்துறை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களுக்கான தலைவர்களும் விரைவில் நியமிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.