மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதிச் சடங்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் ஊடகப்பரப்பில் 40 ஆண்டுகளுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் பாரதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) யாழ்ப்பாணத்தில் காலமானார்.
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் திருநெல்வேலியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் பாரதியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்றைய தினம் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி உரைகள் இடம்பெற்று, தகன கிரியைகளுக்காக மதியம் 1.30 மணியளவில் புகழுடல் கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.







யாழ்ப்பாணம், பலாலி வீதியில் உள்ள பாரதியின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது புகழுடலுக்கு ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தியதுடன், அவருடனான தமது நினைவுகளை அஞ்சலி உரைகள் ஊடாகப் பகிர்ந்துகொண்டனர்.
மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம்
“அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடக விருது வழங்கல் விழாவில் இறுதியாக பாரதியை சந்தித்து விடைபெற்றபோது, இயங்க மறந்த பாரதியைத் தான் மீண்டும் சந்திப்பேன் என நான் கனவிலும் நினைக்கவில்லை. குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்து நிற்பதைக் காட்டிலும் கூடுதலான நெருக்கம் எனக்கும் அவருக்கும் இடையில் இருக்கிறது. அவர் 1992ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்தபோது எனக்கும் அவருக்கும் இடையில் தொடங்கிய ஊடாட்டம், பின்னர் 35 வருடங்களாகத் தொடர்ந்தது. பாரதிக்கு 62 வயது தான் என்றாலும், ஊடகத்துறையில் அவரது பணி என்பது போரின் போதான 30 வருடங்களும், போருக்குப் பின்னரான 15 வருடங்களும் என மொத்தமாக 45 வருடங்களாகும். இந்நீண்ட பயணத்தில் யாருடனும் முரண்படாமல், எல்லோரையும் அரவணைத்து, சகலரோடும் அன்பாகப் பழகி, ஊடகத்துறையில் தனக்கென முத்திரையைப் பதித்த ஒருவர் இருந்தார் என்று சொன்னால், இனிவரும் சந்ததியினர் நம்பாமல் போகக்கூடும். என்னுடன் முரண்பட நேர்ந்த பல சந்தர்ப்பங்களிலும், அதனைத் தவிர்த்து சுமுகமாகச் செயற்பட்ட பாரதியை எனது உடன்பிறவா சகோதரன் என்றே கூறவேண்டும். அவர் விட்டுச்சென்றிருக்கும் பத்திரிகைப் பாரம்பரியம் குறித்து அவரது குடும்பத்தினர் என்றென்றைக்கும் பெருமை கொள்ளமுடியும்.”
‘வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன்
“நான் பாரதி அண்ணனை 35 வருடங்களாக அறிவேன். மிகவும் அன்பாகப் பழகக்கூடிய, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆலோசனைகளை வழங்கக்கூடிய பாரதி அண்ணனின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்குப் பேரிழப்பாகும். 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் எனும் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராக இருந்த பாரதி அண்ணன், பின்னாளில் அதன் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார். யுத்தகாலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். பாரதி அண்ணன் நினைத்திருந்தால் எப்போதோ சென்றிருக்க முடியும். ஆனால் அவர் இந்த நாட்டையும் ஈழ தேசத்தையும் தமிழ்த் தேசியத்தையும் நேசித்தார். அதனால் அவர் தொடர்ந்து இங்கேயே இருந்தார். அவரது இழப்பு எமக்கும் தமிழ் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும்.”
‘முரசு’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன்
1984 செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழமுரசு’ பத்திரிகை தினசரியாக மாறிய நாளில், பாரதி அதில் இணைந்துகொண்டார். அப்போதிருந்து பாரதிக்கும் எனக்கும் இடையில் ஆரம்பித்த நட்பு, அவர் மரணிப்பதற்கு முதல் நாள் மேலும் சில பத்திரிகையாளர்களுடன் அவரைச் சென்று பார்வையிட்டு, கலந்துரையாடும் வரை தொடர்ந்தது. பாரதியின் ஊடகத்துறைப் பிரவேசத்தின் முதல் நாளிலும், இறுதி நாளிலும் அவரோடு பேசிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஊடக தர்மத்தை முறையாகப் பின்பற்றிய ஒரு ஊடகவியலாளனை இனி நாம் காண்பது அரிதாகத்தான் இருக்கும். யுத்தகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தாக்குப்பிடித்த அவருக்கு ‘நல்ல மனிதன்’ என்ற அவரது பண்பே கவசமாக விளங்கியது.”
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி
“மிகவும் அன்பான, பண்பான மனிதராக விளங்கிய பாரதி மறக்கப்படக்கூடிய மனிதர் அல்ல. சிறந்த பத்திரிகைத்துறைக்கு முன்மாதிரியாக விளங்கிய பாரதிக்கு எமது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.”
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஷ் பிரேமசந்திரன்
“கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஒரு நண்பராக எமது இனவிடுதலைப்போராட்டம் குறித்தும், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்கள் குறித்தும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பாரதியுடன் தொலைபேசியிலும், நேரடியாகவும் பேசும் வாய்ப்பைப் பெற்றவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். நான் கடந்த 50 வருடகாலமாக பல ஊடகவியலாளர்களுடன் தொடர்பினைப் பேணிவருகிறேன். ஆனால் பாரதி மிகப் பண்பானவராகவும், பிறர் பேசுவதைப் பொறுமையுடன் செவிமடுத்து, பின்னர் தனது கருத்துக்களை முன்வைக்கக்கூடியவராகவும் இருந்தார். அவரது மறைவு ஊடக மற்றும் அரசியல் நண்பர்களுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.”
அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான நிலாந்தன்
“நான் பாரதிக்கு முன்பதாகவே அவரது பெற்றோரை நன்கறிவேன். ஆளுமை மிகுந்த பாரதி, ஆர்ப்பரிக்கும் கடலை ஒத்த சுபாவத்தைக் கொண்டவரல்ல. மாறாக அதிர்ந்து பேசாத, பாராட்டையும், விமர்சனத்தையும், வசையையும் ஒரேவிதமாக எடுத்துக்கொண்டு கடந்துபோகக்கூடிய ஒரு நதியைப் போன்றவர். ஆனால் அவர் எல்லாவற்றையும் அமைதியாகக் கடந்துபோனார் என்பதற்காக, அவர் எல்லாவற்றையும் சமரசம் செய்துகொண்டார் என்று அர்த்தமல்ல. அவரது தந்தையார் இராஜநாயகத்தைப் போன்றே அவருக்கும் மிகத்தெளிவான அரசியல் நிலைப்பாடுகள் இருந்தன. அந்த நிலைப்பாடுகள் தான் அவரை ஊடகத்துறையில் ஓரிடத்தில் தங்கிவிடாத நாடோடி ஆக்கின.”
புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்
“மிக நேர்மையான ஊடகவியலாளரான பாரதி, அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களுடனும் ஒரேவிதமாகப் பழகி, அவர்களது கருத்துக்களை செவிமடுக்கக்கூடிய பண்பைக் கொண்டிருந்தார். அரசியல் ரீதியில் எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி, எதற்கும் அஞ்ஞாமல், எதையும் துணிந்து எழுதக்கூடிய ஊடகவியலாளரை இப்போது வழியனுப்பிவைக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.”
‘தினகரன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர்
“பாரதி அண்ணனுக்கும் எனக்கும் இடையில் சுமார் 25 வருடகால நட்பு இருந்துவருகிறது. நான் தமிழ் பத்திரிகைகளில் வழமையாக எழுதப்படும் செய்திகளுக்கு எதிர்மறையான செய்திகளை எழுதுகின்ற பத்திரிகையின் ஆசிரியர். அவ்வாறிருப்பினும் நாம் மாலை வேளைகளில் கூடிக்கதைக்கும்போது, ‘அரசாங்கங்கள் மாறும். ஆனால் நீ இந்தத் தொழிலை விட்டுவிட்டுச் சென்றுவிடாதே’ என்று பாரதி அண்ணன் உத்வேகமளிப்பார். தமிழ் பத்திரிகை உலகம் இருக்கும் வரை பாரதியின் நாமம் அதில் என்றும் நிலைத்திருக்கும்.”
‘தமிழன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவராஜா
“1996ஆம் ஆண்டு முதல் கடந்த வாரம் அவரை யாழ் இல்லத்தில் வந்து சந்திக்கும் வரை பாரதி அண்ணன் ஒரேவிதமாகத்தான் இருந்தார். அவருக்குக் கீழ் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இன்னல்களை சந்திக்கும் போதெல்லாம், ஏதோவொரு விதத்தில் அவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கிய ஒரு ஆபத்பாந்தவனாக, மகத்தான மனிதனாக பாரதி திகழ்ந்தார். அவரது மறைவு இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் இட்டுநிரப்பமுடியாத இடைவெளியை விட்டுச்சென்றிருக்கிறது.”
மேலும், பலரது அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து, சிரேஷ்ட ஊடகர் பாரதியின் புகழுடல் இன்று பி.ப 1.30 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் அக்கினியுடன் சங்கமமானது.

