ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரி, சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை கடிதத்தை சட்டமா அதிபர் மீள பெற்றுக்கொள்ளவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டமை மற்றும் அவரது குறிப்பேடு காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், சட்டமா அதிபர் தனது பரிந்துரை கடிதத்தை மீள பெற்றுக்கொண்டார் என ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் போலியானது என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதுமான ஆதாரங்கள் இருந்தால் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியும் என சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது

