ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் என்ற போதைப்பொருளை மோட்டார் வாகனத்தில் கொண்டு சென்ற ஒருவர் கந்தானை ரயில் நிலைய வீதியில் வைத்து செவ்வாக்கிழமை (11) கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் பொரளை, சஹஸ்புர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் திட்டமிட்ட குற்றவாளிகள் குழுவைச் சேர்ந்த தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நபரின் போதைப்பொருளை கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, கந்தானை ரயில் நிலைய வீதியில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலைக்கு முன்னால் அவசர வீதித் தடையைப் பயன்படுத்தி ஒரு மோட்டார் வாகனத்தை சோதனை செய்தபோது, சாரதியிடம் இருந்து ஒரு கிலோ எட்டு கிராம் கொண்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பார்சல்கள் ஐந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், வாகன ஓட்டியைக் கைது செய்து விசாரித்ததில், அந்தப் போதைப்பொருள், வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தற்போது தலைமறைவாக உள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான மோதரா நிபுனவுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது

