வாத்துவையை பதற்றமாக்கிய மரணம்

70 0

வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு குழந்தையின் தந்தை ஒருவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிய போது, இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வாத்துவை தல்பிட்டியவைச் சேர்ந்த ஆர்.எம்.சமித தில்ஷான் என்ற 24 வயதான ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

இறந்தவர் வாத்துவ பொலிஸாரால் வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு, பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் வீட்டில் இருந்தபோது இரவில் இரத்த வாந்தி எடுத்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் இறந்தவரின் மனைவி பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.