விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட சஜித்

141 0

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்

குறித்த அறிக்கை பின்வருமாறு…

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிறுவப்பட்டது. இது நாட்டின் மின்சார துறை, பெற்றோலிய துறை மற்றும் நீர் சேவை துறையை ஒழுங்குபடுத்துவதற்காக ஆகும்.

பின்னர் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் அமுலுக்கு வந்த பின்னர், மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டன.

மின்சாரத் துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் அன்றிலிருந்து ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும், 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் மற்றும் 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளின் கீழ் செயல்படும் பொறிமுறையின் கீழ், கொள்கை வகுத்தல் பணி அமைச்சிற்கும், ஒழுங்குபடுத்தல் பணி இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும், உரிமம் பெற்றவர்களின் பொறுப்புகள் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட உரிமம் பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், 2024 ஜூன் 27 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரத் துறை சட்டமானது, இதுவரை தெளிவாக செயல்பட்டு வந்த கொள்கை வகுத்தல் பணிகள், ஒழுங்குபடுத்தல் பணிகள் மற்றும் உரிமம் பெற்றவர்களின் பணிகளை குழப்பமான முறையில் சிக்கலாக்கி, மின்சார துறையின் ஒழுங்குபடுத்தலில் இதுவரை இருந்த தெளிவான செயல்முறையை சிக்கலான நிலைக்கு தள்ளும் சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.