பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த சிறப்புரிமை மீறல் பத்திரத்தில் உள்ள விடயங்களைத் தவிர்த்து சபையில் உரையாற்றிய ஏனைய அனைத்து விடயங்களும் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
சட்டம் அனைவருக்கும் சமமானது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது. தயவு செய்து அந்த சட்டத்துக்கமைய நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நோக்கி சபாநாயகர் குறிப்பிட்டார்
பாராளுமன்றம் புதன்கிழமை (5) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து ஜனாதிபதியின் அறிவிப்பு, குழுக்களின் அறிவிப்புக்களை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
2025.01.21ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து தான் கொழும்பு நோக்கி வரும்போது அநுராதபுரம் பகுதியில் தனது வாகனத்தை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியபோது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து அர்ச்சுனா உரையாற்றினார்.
அர்ச்சுனா தமிழில் உரையாற்றிய நிலையில் அதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் ‘நீங்கள் உங்களின் சிறப்புரிமை பிரச்சினை தொடர்பான பத்திரத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பித்துள்ளதால் ஆங்கிலத்திலேயே உரையாற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
இதன்போது “நான் சிங்களத்தில் உரையாற்றவா?” என்று அர்ச்சுனா சபாநாயகரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் “முடியாது. நீங்கள் ஆங்கிலத்தில் கடிதத்தை முன்வைத்துள்ளதால் அந்த மொழியிலேயே உரையாற்ற முடியும்” என்றார்.
அதனை தொடர்ந்து அர்ச்சுனா ஆங்கிலத்தில் உரையாற்றிய நிலையில், இடையில் குறுக்கிட்ட சபாநாயகர் “நீங்கள் வழங்கிய கடிதத்தில் உள்ள விடயங்களை மட்டுமே குறிப்பிட முடியும்” என்று அறிவுறுத்தினார். எனினும் அர்ச்சுனா தொடர்ந்தும் வேறு விடயங்களை முன்வைத்ததுடன் சபாநாயகரை நோக்கி விரல் நீட்டி உரையாற்றினார்.
இதன்போது அர்ச்சுனாவின் உரை தொடர்பில் அறிவித்தல் விடுத்த சபாநாயகர், அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை கடிதத்தில் இல்லாத விடயங்கள் அனைத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய சபாநாயகர் அர்ச்சுனாவை நோக்கி ‘நீங்கள் போக்குவரத்து விதியை மீறியுள்ளமை தொடர்பிலும், உங்களுக்கு எதிராக போக்குவரத்து சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் பொலிஸாரால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டம் அனைவருக்கும் சமமானது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி எவருக்கும் சட்டத்தை மீறிச் செல்ல முடியாது. இதனால் தயவுசெய்து அந்த சட்டத்துக்கமைய நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதேவேளை நீங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான வசதிகளை வழங்குமாறும் நாங்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளோம். இதற்கு அப்பால் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
அதனை தொடர்ந்து மீண்டும் உரையாற்ற அர்ச்சுனா முயன்ற நிலையில், “நீங்கள் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களை முன்வைக்கின்றீர்கள்” என்று குறிப்பிட்டு, தொடர்ந்து உரையாற்றுவதற்கு அனுமதி வழங்குவதை மறுத்தார், சபாநாயகர்.

